தமிழக அரசே! 14 உயிர்களைப் பலி கொடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட சிறப்புச் சட்டமியற்று!
1996 தொடங்கி தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பைச் சந்தித்து வரும் ஸ்டெலைட் ஆலை கடந்த காலத்திலும் மூடப்பட்டு பின்னர் உச்சநீதிமன்ற ஆணை பெற்று 100 கோடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் ஆலையைத் திறந்தது.
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்கள் எழுச்சியின் விளைவாக, காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 14 உயிர்கள் பலிவாங்கப்பட்டன. தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமியற்ற வலியுறுத்தி பல்வேறு அரசியல் சக்திகளும் வலியுறுத்தினோம். ” மூடியது மூடியதுதான் ” யாராலும் திறக்க முடியாது என தமிழக முதலமைச்சர் சவடால் அடித்தார். அதே சமயம் ஆலையிலிருந்து அமிலங்கள், ஆலைக் கழிவுகளை அகற்ற, பராமரிக்க தமிழக அரசின் மாவட்ட நிர்வாகம் கதவைத் திறந்தது. காவல்துறை மூலம் சனநாயக ரீதியான எதிர்ப்புகளைப் பதிவு செய்யக்கூட அனுமதிக்காமல் இன்று வரை அடக்குமுறை நிர்வாகத்தை நடத்தி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையின் கார்ப்பரேட் நிர்வாகம் வேதாந்தா தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டு ஆலையைத் திறக்க முயற்சிகளை முன்னெடுத்தது. பசுமைத் தீர்ப்பாயம் ஒருதலைப்பட்சமாக ஸ்டெர்லைட் ஆதரவு நிலை எடுத்து. அருண் அகர்வாலுக்கு ஆதரவாக, தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் யாரும் குழுவில் இருக்கக் கூடாது என வேதாந்தா வலியுறுத்தியது பசுமைத் தீர்ப்பாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழக அரசின் முறையீடுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. தருண்அகர்வார் குழுவினர் ஒரு நாள் தூத்துக்குடியிலும், பின்னர் சென்னையிலும் மனுக்கள் பெற்றனர். தற்போது அவர்களின் முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவின்படி ” மூடுவதற்கு உரிய காரணங்களில்லாமல் ஆலையை மூடியது தவறு ” என அறிக்கை அளித்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலை வருமென்பது முன்னரே தெரிந்துதான் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டமியற்ற தமிழக அரசை வலியுறுத்தினோம். ஸ்டெர்லைட் ஆலை மூடியது சரியா? தவறா? என்பதற்காக அமைக்கப்பட்ட குழுவா? இந்திய அரசின் பசுமைத் தீர்ப்பாயம் நத்தும் நாடகம் அப்பட்டமாகத் தெரிகிறது.
தற்போது தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது ஆலையை நிரந்தரமாக மூடச் சிறப்புச் சட்டம் இயற்றுவது ஒன்றே! நமது கடமை தூத்துக்குடி மக்களுக்குத் தோள் கொடுப்பதும், 14 உயிர்களைப் பலிவாங்கி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்காதே எனக் குரலெழுப்ப வேண்டியது அவசரமும், அவசியமானதுமாகும். கார்ப்பரேட்களின் நலன் காக்கும் மோடி அரசுக்கு எதிராகக் களமாடுவோம்! வேதாந்தாவை விரட்டியடிப்போம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி பேச: 9443184051