சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை பாதுகாப்போம் ! அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் அச்சுறுத்தலை அம்பலப்படுத்துவோம் !
கடந்த 5.11.2018 அன்று அரூர், சிட்லிங் கிராமத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சௌமியா உள்ளூர் காமகொடூரன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் 10.11.2018 அன்று உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்கள் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் குற்றவாளிகள் யார் எனத் தெரிந்தும் காவல்துறை கைதுசெய்யாமல் தப்பிக்கவைத்தது. இதனை மூடி மறைத்ததுடன், சௌமியாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி மருத்துவம் கொடுக்க ஏற்பாடு செய்யாமல் விடுதியில் தங்கவைத்தது. உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து கும்பலும் பணம் கொடுத்து சரிகட்டும் தொழிலை செய்துவருகிறது. அவற்றில் முக்கிய அதிமுக வை சேர்ந்த அரசியல் புள்ளிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.மிகவும் ஏழ்மையான குடும்பமான சௌமியாவின் குடும்பம் வேறுவழியின்றி காவல்துறை அச்சுறுத்தலால் அவர்கள் சொல்படியே நடந்திருக்கிறார்கள்.மிகவும் வலியோடு விடுதியில் துடித்துக்கொண்டிருந்த சௌமியா வாந்தி மயக்கத்தின் உச்சத்தில் தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்களின் அலட்சியத்தாலும் கவனிக்கப்படாமல் சௌமியா காலை 11 மணயளவில் உயிரிழந்தார்.
அதன்பிறகுதான் விசயம் வெளியில் வர, இயக்கங்களின் போராட்ட அழுத்தத்தால் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைதுசெய்வதாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி வாக்குறுதி கொடுத்துசென்றார். குற்றவாளிகளும் சொல்லி வைத்தார் போல் கைதும் ஆனார்கள். ஆனால் குற்றத்திற்கு துணைபோன மூடிமறைத்த கோட்டப்பட்டி, அரூர் காவல் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எதுவுமில்லை. வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடும் ஒருவருக்கு அரசு வேலை, வீடு கட்டி கொடுத்தல் போன்ற கோரிக்கை இன்னும் கிடப்பில் இருக்கிறது. மாறாக உண்மையை வெளியில் சொல்லும் அக்குடும்பத்தை மிரட்டும் செயலில் நிர்வாகம் இறங்கியிருக்கிறது என்றால் இது மக்கள் நலன் அரசா? என்கிற கேள்வியை எழுப்புகிறது.
காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் மீதான புகாருக்குப்பின் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் லட்சுமி ஐ விசாரணைக்கு அமர்த்தியிருக்கிறது. நேர்மையான விசாரணை செய்யப்படும் என மக்கள் மத்தியில் நாடகத்தை நடத்தினாலும் அதன் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது.
தற்போது சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தி கட்டுக்குள் கொண்டுவருவதும், அவர்கள் வெளியில் சென்று உண்மையை சொல்லக்கூடாது எனவும் அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வருகிறது.
அதன் விளைவாகவே மேலிட உத்தரவின் அடிப்படையில் ஆய்வாளர் லட்சுமியின் மூலமாக நேற்று 20.11.2018 இரவு 7.30 மணியளவில் சோதனை என்கிற பெயரில் அராஜகம் அரங்கேறியிருக்கிறது.
ஆர்டிஓ விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவல்துறை மீது அழுத்தமான நடவடிக்கை எதுவும் இல்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தை நசுக்க முயற்சித்திருப்பது, அரசின் அடக்குமுறை மூலம் உண்மை வெளியில் வருவதைத் தடுக்கப் பார்க்கிறது.
குற்றவாளிகளை கைதுசெய்யாமல் தப்பிக்க வைத்தது. லஞ்சம் பெற்று மூடி மறைத்தது. பாலியல் பலாத்காரத்திற்கு துணை போனது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை நோக்கி திரும்ப வேண்டிய நடவடிக்கை பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினை அச்சுறுத்தும் செயலை கையிலெடுத்திருப்பது எவ்வளவு அநீதியான செயல்?
சௌமியாவிற்கு ஆதரவாக நிற்கும் இயக்கங்கள், ஆதரவாளர்களை, செயற்பாட்டாளர்களை நோக்கி அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது.சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு அநீதியும் அரசு அதிகார வர்க்கத்தின், உள்ளூர் ஆதிக்க சக்திகளின் துணையின்றி நடப்பதில்லை என்பதை மேலும் உறுதிசெய்வதாக அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தல் நடவடிக்கை அமைந்திருக்கிறது.
வேடிக்கை பார்க்கும் ஆணையங்கள் இருந்தென்ன பயன்?
-மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம், எஸ்.சி எஸ்டி ஆணையம் தலையிட அழுத்தம் கொடுப்போம்.
– அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் அக்குடும்பத்தை பாதுகாப்பதுடன், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் இச்செயலுக்கு வன்மையான கண்டனக் குரல் எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– நேர்மையான நீதி விசாரணை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்புவோம்.வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைத்திட வலியுறுத்துவோம்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட அழுத்தம் கொடுப்போம்.
ரமணி, பொதுச்செயலாளர்
சாதி ஒழிப்பு முன்னணி
8508726919