ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி  பொதுக்கூட்டம்

09 Nov 2018

நாள்: 9-12-2018, ஞாயிறு, மாலை 5 மணி

இடம்: ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர்.

வரவேற்புரை: பிரபாகரன், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் இயக்கம்

தலைமை: அருண்சோரி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

உரை:

பாலன், பொதுச்செயலாளர், த.தே.ம.மு

மீ.த.பாண்டியன், தலைவர்  த.தே.ம.மு

க.விநாயகம், தலைமைக் குழு, த.தே.ம.மு

வழக்கறிஞர் கென்னடி, தலைமைக் குழு, த.தே.ம.மு

இரணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர், நிலம்-நீர் பாதுகாப்பு மக்கள் இயக்கம்

கு.அற்புதம்மாள்

வழக்கறிஞர் பானுமதி

தமிழ்மாந்தன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

அயனாவரம் முருகேசன், பொதுச்செயலாளர், த.தே.மு

தங்க. குமரவேல், பொதுச்செயலாளர், த.ம.வி.க.

நன்றியுரை: விஷ்ணுகுமார், த.தே.ம.மு

 

அன்பான மக்களே!

உச்சநீதிமன்றம் ஏழு தமிழரை விடுவிக்க சட்டத்தில் இடமுண்டு என்று சொல்லிவிட்டது. தமிழக அமைச்சரவை விடுதலைத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பிவிட்டது. காங்கிரசு, பா.ச.க. தவிர அத்தனைக் கட்சிகளும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்துகின்றன. ஆனால், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கும் கதையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்னும் ஆர்.எஸ்.எஸ். பேர்வழி விடுதலைக்கு குறுக்கே நிற்கிறார். இரட்டை நாக்கு காங்கிரசு தமிழ்மண்ணில் ஒரு பேச்சும் தில்லியில் ஒரு பேச்சும் பேசுகிறது, பா.ச.க.வும் அ.தி.மு.க.வும் சேர்ந்து கொண்டு பயங்கரவாதத்திற்கு துணை போகின்றன என எழுவர் விடுதலையைப் பற்றி அறிக்கைவிடுகிறது.

சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரும் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று 28 ஆண்டுகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். 26 பேரை தூக்கில் போட வேண்டுமென 1996 இல் முதல் தீர்ப்பு வந்த நாள் தொட்டு தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. கீழ் நீதிமன்றம் 26 பேரையும் தூக்கில் போட சொல்ல மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் நால்வருக்கு கொலைத் தண்டனை தந்தது.

இராஜீவ் கொலையின் பெயராலேயே ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களின் உயிர் குடித்தனர். முள்ளிவாய்க்கால் பேரழிவு நடக்கக் கண்டோம். இரத்தவெறி அடங்காத காட்டேறி போல் 2011 இல் மூவரைக் கொல்ல நாள் குறித்தது இந்திய அரசு. செங்கொடி என்ற ஈகநெருப்பு மூண்டது! கழுத்தை இறுக்கிய கயிறு அந்த நெருப்பில் கருகி அறுந்தது. செங்கொடியின் ஈகத்தால் சட்டமன்றத் தீர்மானங்கள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி இயற்றப்பட்டன.  நீதிமன்றத்தில் தடை கோரியது இந்திய அரசு. சட்டப் போராட்டம் தொடர்ந்தது. ஒருவழியாக சட்டப் புத்தகத்தின் உரிமைப் பக்கங்கள் உயிர்ப்பெற்றன.

ஆனால், ஆளுநர் சிறைக் கதவின் சாவியை எடுத்துக் கொண்டு விளையாடுகிறார். எழுவர் விடுதலை மட்டுமல்ல இது எம் மக்களின் இறையாண்மை. எங்கள் சட்டசபை  தீர்மானத்தின் வெகுமானம். எங்கள் தமிழ்த்தேசத்தின் தன்மானம். ஒன்றல்ல, இரண்டல்ல 28 ஆண்டுகள்! பத்தாயிரம் நாட்கள்! பத்தாயிரம் இரவுகள்! இனியும் காலந் தாழ்த்த வேண்டாம்! சிறைக் கதவுகள் திறக்கப்படாவிட்டால், ஆளுநர் மாளிகையை இழுத்துப் பூட்டுவதை தவிர வேறு வழியில்லை.

தமிழர் நிலத்தை அழிக்காதே!

ஸ்டெர்லைட் என்னும் தாமிர உருக்கு ஆலையை மூடென்று சொல்கிறோம்; இன்றல்ல, நேற்றல்ல 24 ஆண்டுகளாக சொல்கிறோம். ஸ்டெர்லைட்டை மூடச் சொல்லி குடும்பம் குடும்பாக குழந்தை குட்டிகளோடு போனவர்கள் மீது துப்பாக்கியைத் திருப்பியது ஆளும் வர்க்கம். 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உறுப்பிழந்தோர் எண்ணிக்கை நூறைத் தொடும். ஏன் சுட்டார்கள்? ஹாலிவுட் படம் பார்ப்பதுபோல் டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்கிறார் முதல்வர். அப்படியென்றால் சுட்டதற்கு ஆணையிட்டது யார்? ஆட்சியர் ஆணையிட்டரா? அவர் அன்றைக்கு எட்டையபுரம் போய்விட்டார். அதன் பிறகு அவரைக் காணவில்லை! வழக்கம் போல் ஒரு விசாரணை ஆணையம். அதன் அறிக்கையும் வரவில்லை. ஆலையை மூடிவிட்டதாக அரசு சொல்கிறது. சட்டமியற்றி கொள்கை முடிவெடு என்றால் முடியாதாம்!

முத்துநகரம் தூத்துக்குடிக்கு மட்டுமா இந்நிலை?  கார்ப்பரேட் திட்டங்களின் ஆக்டோபஸ் கைகள் நமது நிலமெங்கும் சுற்றி வளைத்துள்ளன.  மீத்தேன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிறுவனம் வருகிறது என்றார்கள். போராடினோம், பின்வாங்கினார்கள். ஹைட்ரோகார்பன் எடுக்க ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனம் வருகிறது என்றனர். போராடினோம், பின்வாங்கினார்கள். நெடுவாசல், கதிராமங்கலம், மாதிரிமங்கலம்  என போராட்டக் களங்கள் பெருகத் தொடங்கின. ஓ.என்.ஜி.சி. யே வெளியேறு, காவிரி பாயும் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாய் அறிவித்திடு என்றோம்.  கடலூர், நாகை மாவட்டங்களில் 43 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. 23000 ஹெக்டெரில் 92000 கோடி முதலீட்டு மையமாம்!

 

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாதானம் கிராமம் முதல் தரகம்பாடி தாலுக்கா மேமாத்தூர் வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வழியே 50 க்கு மேற்பட்ட கிராமங்களைக் கடந்து கெயில் குழாய் பதிப்பதற்காக 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது அரசு.

அக்டோபர் 1 அன்று  நாகை, கடலூர், விழுப்புரம், காரைக்கால் மாவட்டங்களில் சுமார் 4500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தாவும் சிதம்பரத்தை ஓட்டிய பகுதிகளில் 731 சதுர கி.மீ. பரப்பளவில் ஓ.என்.ஜி.சி.யும் நிலக்கரி, மீத்தேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எரிபொருட்கள் எடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளது இந்திய மோடி அரசு. என்ன செய்ய நினைக்கிறார்கள் தமிழ் நிலத்தை? தமிழ்நாடென்ன திறந்த வீடா? கார்ப்பரேட் கழுகுகள் வட்டமிடும் வேட்டைக்காடா? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் இந்நிலத்தொடு பிணைந்த வாழ்வு நமக்கு உண்டு!

வளர்ச்சி என்றால் ’தேசத்தின் வளர்ச்சி’ என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த காலம் மலையேறிவிட்டது. வளர்ச்சியா? யாருக்கு வளர்ச்சி? மக்களுக்கா? அம்பானி, அதானி, அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட்களுக்கா? வேளாண் நிலங்கள் பாழாகுமாமே? நீரும் காற்றும் மாசுபட்டால் நாங்கள் எப்படி வாழ்வது? என்று மக்கள் கேள்விக் கேட்க தொடங்கிவிட்டனர்.

தமிழர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைப் பொறுக்க மாட்டாமல் அடக்குமுறையை ஏவிவருகிறது மோடி அரசு. பேசினால், எழுதினால், பாடினால், முகநூலில் கருத்துப் போட்டால், முழக்கமிட்டால், பொதுக்கூட்டம் நடத்தினால், போராடினால் என எல்லாவற்றையும் குற்றம் என சிறையிலடைக்கிறது அரசு. சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு என்று கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையே சான்று. காவி-கார்ப்பரேட் கூட்டணி சர்வாதிகார ஆட்சி நடத்திவருகிறது.

ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத பா.ச.க. புறவாசல் வழியாக தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துகிறது. எடப்பாடியும் பன்னீரும் அடகு வைக்கும் உரிமைகளை மீட்க இன்னும் கால் நூற்றாண்டு போராட வேண்டியிருக்கும். சில சாதிக் கட்சிகள் ஓரிரு மந்திரிப் பதவிக்காக பா.ச.க.வுக்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளிடம் இருந்து கொள்கை அறிவிப்பு ஏதும் இல்லை. கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கை மீதான மக்களின் சினத்தைக் கொண்டே சிம்மாசனம் ஏறிவிடப் பார்க்கின்றன. காவிரிப் படுகை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுமா? கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கைக்கு கதவடைக்கப்படுமா? விளை நிலங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படுமா? இதிலேதேனும் ஒரு கேள்விக்கு அவர்கள் உறுதியளிப்பார்களா?

நாடு 2019 பொதுத்தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பத்தாண்டுகாலமாக மக்கள் போராடிக் கொண்டிருக்கிற கோரிக்கைகள் ஒருபுறமும் அது எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாத தேர்தல் அரசியல் மறுபுறமுமென்று களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களுக்கான கோரிக்கைகளையும் அரசியலையும் எல்லாக் களத்திலும் பேச வேண்டியிருக்கிறது.

பன்முகம் கொண்ட நாட்டினை  ஒரே தேசம், ஒரே வரி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சந்தை, ஒரே தேர்வு, ஒற்றை சாளர முறை என ஒற்றையாட்சியை நடத்திடும் பா.ச.க. வை விரட்டியடிப்போம்!

அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்போம்!

மக்களை மறந்து பதவிக் கனவில் மட்டும் மிதப்போரை நிர்பந்திப்போம்!

காவி-கார்ப்பரேட் சர்வாதிகார கூட்டணியை முறியடிப்போம்!

தஞ்சையை நோக்கி அணி திரள்வீர்!

காவி-கார்ப்பரேட் கூட்டணி எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்!

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

7299999168, 7826824196, 9443079552 www.peoplesfront.in

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW