மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்!

04 Nov 2018

கடந்த செப்டம்பர் 28 அன்று ஹிமாந்த் நகர், சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது. இந்த கொடும் குற்றத்திற்கு காரணமானவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குழந்தை தக்கூர் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவன் பீகாரை சேர்ந்த வெளி மாநில புலம்பெயர் தொழிலாளி.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி வேண்டி தக்கூர் சாதி மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஊர்வலங்கள் பல நடத்தப்பட்டுள்ளது. குஜராத் காங்கிரஸ் தலைவர் மஹோட்ஜி தக்கூர் என்பவர் புலம்பெயர் தொழிலாளர் இருவரை பார்த்து பேசுவதாக ஒரு காணொளி,’உ.பி மற்றும் பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் எங்களுக்கு தேவையில்லை. முதல் ரயிலை பிடித்து கிளம்புங்கள்…’ என்பதாக இருக்கிறது. குற்றவாளி பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி என்ற தகவல் பீகார், உத்திரபிரதேசம்,மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநில புலம்பெயர் தொழிலாளர்களை வெளியேற்றும் நோக்கத்தோடு ’வெளியாட்கள்’ (par prantiya- outsider) என்ற பரப்புரை காட்டுத்தீயாய் இணைய தளம் வழியாக பரப்பட்டுள்ளது. இதன் காரணமாய் வட குஜராத்தில் உள்ள காந்தி நகர், மெஹ்சனா, சபர்கந்தா மற்றும் ஆரவல்லி மாவட்டங்களில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் தொடங்கி இருக்கிறது.

பல வருடங்கள் குஜராத்தில் வாழ்ந்திருந்தாலும், திடீரென்று ஓர் இரவில் தாங்கள் குறி வைத்து தாக்கப்படுவதை புரிந்து கொள்ள முடியாமல் அச்சத்தாலும், அவநம்பிக்கையாலும் உயிர் பிழைத்தால் போதும் என்று தங்கள் மாநிலத்தை நோக்கி கிடைத்த பேருந்துகளிலும், ரயிலிலும் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் புறப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டு உரிமையாளர்கள் அவர்களை வீட்டை காலி செய்ய சொல்லி விட்டனர்.

சில இடங்களில் உத்தர் பாரதிய விகாஷ் பரிசத்(Uttar Bhartiya Vikas Parishad) என்ற அமைப்பு குஜராத்தை விட்டு வெளியேறாத புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்க ஏற்பாடுகளை செய்து பாதுகாப்பு அளித்துள்ளது. ஏறக்குறைய 50,000 தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட இந்த தொழில் பகுதியில் 15% வரை உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கலாம் என குஜராத் வர்த்தக சபை கூறுகிறது. தாக்குதலில் ஈடுபட்டதாக 342 பேர் கைது செய்யப்பட்டு 18 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. காவல்துறை உடனடியாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குகிற இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர். இருந்தாலும் குறைந்தது 42 தாக்குதல்கள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் முதல் வாரம் வரை வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் மற்றும் உத்திரபிரதேச தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. குஜராத் அரசு தரப்பு தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் ஊருக்கு சென்றதாக கூறியது. ஆனால், வட மாநில தொழிலாளர்கள் தீபாவளி அல்லது சாத் பூஜை என்பதைதான் கொண்டாடுவார்கள். அது நவம்பர் மாதத்தில் வருகிற பண்டிகை, எனவே அரசு தரப்பின் இது போன்ற பதில்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையை மறைக்கும் முயற்சியாகவே இருந்தது.

இந்த தாக்குதலில் ஷத்திரிய தக்கூர் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்பு குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ அல்பேஷ் தக்கூர் அவர்களின் தலைமையில் செயல்படுகிற அமைப்பாகும். ஆனால், அல்பேஷ் தக்கூர், தக்கூர் சேனா அமைப்பினர் வேண்டுமென்றே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதே நேரத்தில் அவர் தக்கூர் சாதி மக்களை சந்தித்து வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அவர்களும் நமது சகோதரர்களே என்றும் அவர்களை அமைதி படுத்தும் முயற்சியையும் செய்திருக்கிறார். குஜராத்தை ஆளும் பிஜேபி முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டவர்களும் ராகுல் காந்தி உள்ளிட்டு குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர்களும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றச்சாட்டை வீசிக் கொண்டனர்.

இந்திய பொருளாதார ஆய்வறிக்கை(The Economic Survey of India) 2017, 2011-2016 வரையில் ஆண்டுக்கு 90 லட்சம் தொழிலாளர்கள் இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே வேலை தேடி புலம்பெயர்கிறார்கள் என்கிறது. ஏறக்குறைய 14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பதாக உலக பொருளாதார அமைப்பு (World Economic Forum) கூறுகிறது. இதில் உத்திரபிரதேசம், பீகாரில் இருந்து தான் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ் நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களை நோக்கிதான் பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் வருகின்றனர்.

குஜராத்தின் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 கோடி பேர். அதில் 70% பேர் உத்திரப்பிரதேசம், பீகார்,மத்தியபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். குஜராத் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருப்பவர்கள். ஏழாவது பெரிய மாநகரமான அகமதாபாத்தில் மட்டும் 13-17 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.  அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு பாதுகாப்பற்ற வேலைகளில் கட்டுமானம், உணவகங்கள், ஜவுளித்துறை, உற்பத்தி, போக்குவரத்து, சேவைத்துறைகளில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் மிக மோசமான சுரண்டலுக்கு ஆளாகக்கூடிய ஒப்பந்த தொழிலாளர் வலைப்பின்னலில் மாட்டியுள்ளனர். ஒப்பந்தகாரர்கள் மூலம் அவர்களின் சொந்த மாநிலத்தில் எளிதாக வேலை கிடைப்பதில்லை.

குஜராத்தில் வட மாநில தொழிலாளர்கள் மீது நடந்த இந்த தாக்குதல் என்பது ‘வேலையற்ற வளர்ச்சியின்’ வெளிப்பாடே என்பது அகமதாபாத்தை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அச்யூத் யாக்னிக் அவர்களின் கருத்து ஆகும். மேலும் யாக்னிக் ’இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி படிப்பை முடித்துள்ள பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 25% சிறு குறு தொழில்கள் அரசின் ஆதரவு இல்லாததால் மூடப்பட்டுவிட்டது. எல்லோருக்கும் தெரியும் இந்த சிறு குறு தொழில்கள்தான் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும் என்பது. மோடி இந்த சிறு குறு தொழில்களை அழித்து ரிலையன்ஸ் போன்ற பெரும் தொழில்களை வளர்த்து இருக்கிறார்’

குஜராத்தில் மிக வேகமாக நகரமயமாக்கல் நடைபெருகிறது. உள்ளூர் இளைஞர்கள் அதிக உடலுழைப்பை தவிர்க்கும் வேலைகளில் நாட்டம் கொள்கின்றனர். உதாரணமாக அகமதாபாத்தை ஒட்டிய தக்கூர்கள் சிறு குறு விவசாயிகள். தொழிற்சாலைகளுக்காக தங்கள் நிலங்களை குறுகிய காலத்தில் பணம் கிடைத்தது என்பதால் கொடுத்து விட்டனர். ஆனால், இளைஞர்களுக்கு பெரிய அளவில் படிப்போ திறமையோ இல்லை. எனவே அவர்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைப்பது இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு உள்ளூர் இளைஞர்களுக்கு 80% வேலை என்பது குறித்து பேசப்படுகிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் செய்யும் வேலைகளை உள்ளூர் இளைஞர்கள் செய்வார்களா எனத் தெரியவில்லை. இந்த வேலையில்லாத் திண்டாட்டம் தான் தக்கூர் இளைஞர்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார் யாக்னிக்

இந்த பொருளாதார கொள்கையின் பிரச்சினை குறித்து எங்குமே அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவதில்லை. இது குறித்து புரிதல் இல்லாத இளைஞர்களுக்கு, எளிமையாக ஒரு எதிரியை கை காட்டுகின்றனர். குறைந்த கூலிக்கு பாதுகாப்பற்ற பணி சூழலில் அனைத்து வித சுரண்டலுக்கு ஆளாகும் அப்பாவி புலம்பெயர் தொழிலாளர்கள் தான் வேலையின்மைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேலையில்லா பொருளாதார வளர்ச்சி (Jobless Growth) கொள்கையை, அம்பானி, அதானிகள் போன்ற பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த பொருளாதார கொள்கையை நோக்கி இளைஞர்களின் கோபம் திரும்புவது மடை மாற்றப்படுகிறது.

பொதுவாக பெண்கள் மீதான் பாலியல் வன்முறை என்பது அதிகரித்து கொண்டு இருக்கிற காலகட்டமாக இருக்கிறது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் சொந்த சாதியை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அது போன்ற நேரங்களில் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரையும் நாம் விலக்கி வைப்பது இல்லை. உண்மையில் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் காப்பாற்றப் படுகிறார்கள். எனவே, குழந்தையின் மீதான பாலியல் வன்முறையை காரணம் காட்டி ‘புலம்பெயர் தொழிலாளர்கள்’ என்ற புதிய எதிரியை கட்டமைப்பது என்பது இங்கே வேலையற்ற வளர்ச்சி என்ற பிரச்சினையின் ஆணி வேர் மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரி தான் என்பது பற்றி மக்கள் அறியச் செய்யாமல் மறைக்க பயன்பட்டு இருக்கிறது.

 

  • பரிமளா, தலைவர் , Forum for IT Employees (F.I.T.E)

References

https://thewire.in/rights/as-migrants-continue-to-flee-gujarat-industrial-production-hit-during-key-period

https://thewire.in/rights/migrant-labour-exodus-dark-side-narendra-modi-gujarat-model

https://www.weforum.org/agenda/2017/10/india-has-139-million-internal-migrants-we-must-not-forget-them/

https://www.weforum.org/agenda/2017/10/india-has-139-million-internal-migrants-we-must-not-forget-them/

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW