நவம்பர் 1 – வல்லபாய் படேலின் ஒற்றை இந்தியத் தோல்வியும், மொழிவாரி மாநிலங்களின் தோற்றமும்

01 Nov 2018

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் சட்டத்திருத்தம் இந்திய அரசமைப்பில் கொண்டு வரப்பட்டது.  அதன்படி 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு  என சென்னை  மாகாணம் பிரிக்கப்பட்ட நாள் இன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கும் தமிழக எல்லைகளைக் காப்பதற்கும் தமிழ்நாடென்று பெயர் சூட்டுவதற்கும் என  போராடியவர்கள் பலர். அதில் பெரியார், ஜீவா, அண்ணா, ம.பொ.சிவஞானம், விநாயகம், மங்கலக்கிழார், கொ.மோ. ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ. தாமோதரன், பி.எஸ்.மணி, மார்சல் நேசமணி, சங்கரலிங்கனார், குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், தாணுலிங்க நாடார், டாக்டர் மத்தியாஸ், செங்கோட்டை கரையாளர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களில் சிலர்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதில் காந்தி உடன்பட்டிருந்தார். அவர் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்புகூட இது குறித்து வழிபாட்டுக் கூட்டத்தில் பேசினார். ஆனால், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதில் நேருவுக்கு உடன்பாடில்லை.

”தெலுங்கன் ‘விசாலாந்திரம்’ கோருகிறான். மலையாளி ’நவீன கேரளம்’ வேண்டுகிறான். கன்னடத்தான் ‘சுதந்திர கன்னடத்தை’ நிறுவ முயல்கிறான். தமிழன் ‘ புதிய தமிழகத்தை’ குறிக்கோளாக்கி முன்னேறுகிறான். இன எழுச்சியின் இயற்கையான வளர்ச்சியை இங்கு காண்கிறோம்.” .. இனப் பிரச்சனை உலகிற்கெல்லாம் ஒரு மாதிரி தமிழனுக்கு மட்டும் வேறுமாதிரி இருக்க முடியாது. தெலுங்கனுக்கும், கேரளத்தாருக்கும் இனப்பிரச்சனை மொழி, பண்பாடு, இயற்கைத் தாயகம், மனப்பான்மை ஒருமிப்பு, பொருளாதாரப் பொதுவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இன்று தேசிய இனங்கள் இந்த அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. இதை ஒட்டியே தமிழனும் தனது கொள்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழினம் பரிபூரண அரசுரிமை பெற இந்தியா விடுதலைப் பெற்றாக வேண்டும். அதாவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஒழிப்பின் பிறகுதான் சுதந்திரத் தமிழகம் மலர முடியும்” – என 1946 ஆகஸ்டில் தமிழ் முரசு இதழில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் எழுதுகிறார். 1948 ஆம் ஆண்டில், இந்திய பொதுவுடமை இயக்கம் தன்னாட்சி கொண்ட மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.

1948 ஜூன் இல் திரு. எஸ்.கே. தார் தலைமையில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒரு குழுவை அமைத்தார் நேரு. அவ்வாண்டு இறுதியில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கு எதிராக அக்குழு தன் முடிவுகளை வழங்கியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன, தெலுங்கு மொழிப் பேசும் பகுதிகளில் பெருமளவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வேறு வழியின்றி மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்த ஆய்வு செய்ய நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சித்தராமையா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது காங்கிரசு கட்சி, இக்குழுவும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதை சில ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கலாம் என பரிந்துரைத்தது.  இருப்பினும் தெலுங்கு பேசும் மக்கள் சென்னையைத் தவிர்த்து, ஆந்திர மாநிலம் அமைக்க ஒப்புக்கொண்டால் மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கான முடிவினை மேற்கொள்ளலாம் என்றும் காங்கிரசு கட்சி அறிவித்தது.

1951 ஆகஸ்ட் 15 அன்று விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியவாதியுமான கொல்லப்புடி சீத்தாராமசாமி தெலுங்குப் பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் இறங்கினார். 35 நாட்களுக்குப் பிறகு வினோபா பாவே வின் வலியுறுத்தலால் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டார். 1952 அக்டோபர் 19 அன்று காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி பட்டினிப் போராட்டத்தில் இறங்கினார். திசம்பர் 15 அன்று 58 ஆவது நாளில் போராட்டப் பந்தலிலேயே உயிர்விட்டார் ஸ்ரீராமுலு. திசம்பர் 19 அன்று சென்னை தவிர்த்த தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று நேரு அறிவித்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட்டங்கள் தொடர்ந்ததால் பசல் அலி, கே.எம். பனிக்கர், எச்.என். குன்சுரு ஆகியோரைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை 1953 இல் அமைத்தது இந்திய அரசு. இக்குழு 1955 இல் தன் பரிந்துரைகளை முன் வைத்தது. அதன்படி 1956 இல் நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. வடக்கெல்லைப் போராட்டம், குமரியை மீட்கும் தெற்கெல்லைப் போராட்டம், நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை மீட்புப் போராட்டம் என தமிழகத்தில் எல்லைக் காப்பு போராட்டங்கள் நடந்தன. கன்னியாகுமரி மாவட்ட மீட்புப் போராட்டத்தில் மட்டும் 19 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை. இவ்வெண்ணிக்கை நாற்பதை தொடக்கூடும். இப்படியெல்லாம் போராடியும் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என அண்டை மாநிலங்களிடம் நிலங்களை இழந்தது தமிழ்நாடு.

முதலில் டாக்டர் அம்பேத்கரும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்தையே கொண்டிருந்தார். மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையில் உள்ள விளக்கங்களைக் கண்டபின்பு தம் கருத்தை மாற்றிக் கொண்டார். அதே நேரத்தில், ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்பதற்கு பதிலாக ஒரு மாநிலத்திற்கு ஒரு மொழி என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார்.

கடைசி வரை இதில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது இந்துத்துவ ஆற்றல்கள் தான். “இதனால் மாநிலங்களுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் கிடைத்து விடுகிறது. கூட்டாட்சி முறை வந்துவிட்டால் ஏராளமான அரசியல் கட்சிகள் வந்துவிடும். அதனால் தகராறுகள் ஏற்படும். ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஆகிவிடும். அதனால் இந்த பழமை வாய்ந்த பாரதபூமி ( பாரத வர்ஷா) சிறிது சிறிதாக பிளவுபட்டு விடும். அதன்பின் இந்தியா உலகத்தின் முன் மிகப்பெரிய சக்தியாக, அய்ரோப்பாவுக்கு எதிராக வளர முடியாது!” என்றது இந்து மகாசபை. மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்காமல், ஒரே அரசாங்கம் இருக்க வேண்டும்; அதுவே இப்போது தேவை என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர். ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்தி கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு எனப் பிரகடனப்படுத்துவோம் என்று 1957 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் ஜனசங்கம் முன்வைத்தது. மொழிவாரியாக பிரிக்காமல் 50 மாநிலங்களாக துண்டுதுண்டான நிர்வாக அலகுகளாக பிரிக்க வேண்டும் என்ற கருத்தை இந்துத்துவ சக்திகள் கொண்டிருந்தனர்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு திராவிட நாடு என்று குறிப்பிடுவதைக் கூட பெரியார் நிறுத்திவிட்டார். மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் எனப் பிரிந்துசென்றது நல்லது என்று வரவேற்றார். அதே போது, திராவிட முன்னேற்றக் கழகம் மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகும் திராவிட நாடு கோரிக்கையைப் பேசிக் கொண்டிருந்தது. இதை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் கடுமையாக குற்றாய்வுக்கு உட்படுத்தியது. திராவிட நாடா? தனித் தமிழ்நாடா? என்று ஒரு வெளியீடு கொண்டு வந்தது. சென்னை மாகாணம் என்று கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகியவற்றின் ஒரு பகுதியோடு தமிழ்நாடு இருந்த காலம் முடிவுக்கு வந்து இவையாவும் தனித்தனி மாநிலங்கள் ஆன நிலையில், பெரியார் திராவிட நாடு என்றோ தமிழ்நாடு என்றோ குறிப்பிட்டு பாடாற்றியதெல்லாம் தமிழ் பேசும் மக்கள் திரளிடையே அன்றி வேறு யாரிடமும் இல்லை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்.

1960 இல் மராட்டிய மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. 1966 இல் அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உருவாயின. பிறகு உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து உத்திராஞ்சல், ஜார்கண்ட் ,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டன. மிக அண்மையில் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் கூர்கா லேண்ட் என தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என கூர்காக்கள் போராடி வருகின்றனர்.

எதிர்காலத்தில் தமிழ்நாடு இவ்விசயத்தில் ஓர் இடர்பாட்டை சந்திக்க நேரிடும். இந்திய அரசமைப்பின் உறுப்பு 3ன் படி ஒரு மாநிலத்தை உடைத்து புதிய மாநிலத்தை உருவாக்கவோ, ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றி அமைப்பதோ, ஒரு மாநிலத்தின் பகுதியை எடுத்து இன்னொரு மாநிலத்தின் பகுதியோடு சேர்ப்பதோ நாடாளுமன்ற பெரும்பான்மையின் வழி செய்துவிடலாம். அதுவும் எளிய பெரும்பான்மை அதாவது சரிபாதிக்கு மேல் ஒரு வாக்கு அதிகமாக இருந்தால் போதும் ஒரு மாநிலத்தை உடைத்துவிடலாம். புதிய மாநிலங்களை உருவாக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவதில்லை. அதிலும் குறிப்பாக இந்துத்துவ ஆற்றல்கள், நிர்வாக அலகுகளாக மென்மேலும் சிறுசிறு மாநிலங்கள் உருவாவதை விரும்புகின்றன.

தேசிய விடுதலை இயக்கங்கள் நடந்துவரும் பெரும்பாலான நாடுகளில் அதன் எல்லைகள் பாதுகாக்கப்படாத, பிரதேசங்கள் துண்டாடப்பட்டிருக்கும் நிலையைக் காண்கிறோம். ஈழத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு இன்றைக்கு வரை ஒரு கோரிக்கையாக இருக்கிறது. காஷ்மீர் விசயத்தில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என அது பிரிந்து கிடக்கிறது.

ஏற்கெனவே, தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என இரண்டாகப் பிரிக்க வேண்டும் மற்றும் மேற்கையும் தனியாகப் பிரித்து மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  சாதிக் குழுக்களுக்கு தலைமையேற்று வரும் ஆளும்வர்க்க ஆற்றல்கள் நீண்ட கால நலன்களைவிட குறுகிய கால, உடனடி, பதவி நலன்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர். ஒருபக்கம் தமிழ்த்தேசிய இயக்கம் வளர்ச்சிப் பெற்று வரும் நிலையில் இன்னொருபுறம் தமிழ்த்தேசத்தை இரண்டாக்கும் கோரிக்கைகள் எழுமாயின் அதை ஆதரித்து தமிழ்த்தேசத்தை துண்டாடும் வேலையைத்தான் ஆளும் வர்க்கம் செய்யும். அதிலும் குறிப்பாக இந்துத்துவ ஆற்றல்கள் சாதிக் குழுக்களின் வழியாகவே கிளைப் பரப்பி வரும் நிலையில் இக்கோரிக்கையைக் கையில் எடுத்து மக்களை திரட்டிப் போராட்டங்களைக் கூட முன்னெடுக்க கூடும்.

எனவே, நீண்ட கால நோக்கில் இதை கருதிப் பார்த்து, வருங்காலத்தில் எழக்கூடிய இச்சிக்கலை எதிர்கொள்ள அணியமாக வேண்டியுள்ளது. ஒருவேளை இக்கோரிக்கை எழுந்தால் அதை சனநாயகப் பூர்வமாகவும் அணுக  வேண்டியுள்ளது. மேலும், இதற்கானப் பொருளியல் அடிப்படையாக அமைந்துள்ள தென் தமிழகத்தில் தேங்கிப் போயுள்ள உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தல், சமசீரற்ற வளர்ச்சி நிலைமைகளை சரிசெய்தல், தமிழ்த்தேசிய ஓர்மையை வளர்த்தெடுப்பதற்கான இயக்கங்களை முன்னெடுத்தல் ஆகியவை குறித்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பே, 1950 இல் மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்ட அரசமைப்பு இயற்றப்பட்டு விட்டது. அது 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் உருவாக்கிய அரசமைப்பின் ஒற்றையாட்சித் தனங்களை அப்படியே படியெடுத்தாற் போன்றதாகும். 62 ஆண்டுகளில் மையத்தில் மென்மேலும்  அதிகாரக் குவிப்பு என்பது இந்திய அரசியலின் பொதுவழியாக அமைந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட காலமென்பது உலகளவில் பனிப்போர் காலம் ஆகும். அப்போதுதான் குடியேற்றங்களிலிருந்து விடுதலைப் பெற்றிருந்த மூன்றாம் உலக நாடுகள் மக்கள் நல அரசுகளாக தமது புதுவாழ்வைத் தொடங்கியிருந்த காலம். ஆனால், பனிப்போர் காலம் முடிந்து, பனிப்போருக்குப் பின்பின்னான காலத்தில் இருக்கிறோம். உலகமயமாக்கலில் நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோடுகள் அரசியல்பொருளியலில் ஒன்றுமே கிடையாது என்ற நிலையேற்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோடுகளுக்கே இதுதான் நிலையென்றால் ஒரு நாட்டிற்குள் இருக்கும் தேசங்களுக்கு இடையிலான எல்லைக்கோடுகளுக்கு என்ன பொருள் இருக்கப் போகிறது? அதுவும் அதன் தொடக்கத்திலே மாநிலங்களுக்கு அதிகாரமற்ற அரசமைப்பை உருவாக்கிக் கொண்ட ஆளும்வர்க்கம் அல்லவா இது? அன்றைக்கே இம்மாநிலங்கள் முனிசிபாலிட்டிப் போல் உருவாக்கப்படுகின்றன என்று குற்றாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து கடன், மானியம் வழியாக பெரும் தொகையைக் கொண்டே மாநிலங்களின் செலவை சமாளிக்கும் நிலையில் மாநிலங்கள் உள்ளன. தமிழக அரசு  டாஸ்மாக், பெட்ரோல்-டீசல் வரி போன்றவற்றின் வழியாகத் தான் வருவாய் ஈட்ட முடிகிறது. எனவே, நிதி அதிகாரமில்லாத காரணத்தால் ஏனைய எந்த விசயத்திலும் தற்சார்பாக தன்னுடைய கொள்கைகளை வகுத்து கொள்ள முடியாதபடி மத்திய அரசைப் பின் தொடர்வதை தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைக்கு வல்லபாய் படேலின் 152 மீட்டர் உயரமான சிலையைத் திறந்து வைத்த போது தலைமை அமைச்சர் மோடி ஆற்றிய உரை கவனத்தில் கொள்ளத்தக்கது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைத்தவர் படேல் என்று பெருமிதம் கொள்கின்றனர். அந்த சமஸ்தானங்களை ஆண்ட மன்னர் பற்றிய கவலை நமக்கில்லை. ஆனால், அம்மன்னர்களால் ஆளப்பட்ட மக்களுக்கு இந்தியாவுடன் இணைய விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி இன்றியே அவர்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டனர். தெலங்கானாவில் மிகத் தெளிவாக நிலவுடைமை ஆற்றல்களோடு கூட்டு வைத்துக் கொண்டு மக்களை ஒடுக்கியது படேலின் இராணுவம். இக்காரணிகளால்தான், படேலை ’இரும்பு மனிதர்’ என்கின்றனர்.

“இந்தியா நீடித்திருக்குமா என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கு இந்தியா என்றுமே அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதை உணர்த்துவதாக இந்த சிலை இருக்கும்” என்றும் “அவர் நாட்டை பூகோள ரீதியாக ஒன்றிணைத்ததைப் போலவே, ஒரே நாடு, ஒரே வரிக் கொள்கையான ஜி.எஸ்.டி. யை கொண்டு வந்ததன் மூலமாக நாட்டை நாங்கள் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்தோம்.” என்றும் மோடி பேசியுள்ளார்.

படேலின் பணியை அவரின் வாரிசுகள் தொடர்கின்றனர். மொழிவாரி மாநிலங்கள், அதன் எல்லைக்கோடுகள், அவற்றின் இறையாண்மை, தற்சார்ப்பு, நிதியதிகாரம், சந்தை இவையெல்லாம் இன்றைக்கு பேசு பொருளல்ல. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மதம், ஒரே கட்சி என ஓங்கி முழக்கமிடுகின்றனர்; செயல்படுத்துகின்றனர்; அதன் குறியீடாகவே உலகிலேயே மிக உயரமானதாக படேல் சிலையை நிறுவியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் மீது இந்தியப் பெருமுதலாளிய ஆளும் வர்க்கம் நடத்திய போரின் வெற்றிக் குறியீடு நர்மதை மாவட்டத்தின் சர்தார் சரவோர் அணைப்பகுதியில் நிற்கும் படேல் சிலை.

சிலை நிறுவிய வெற்றிக்களிப்பின் பெருமூச்சு ஆளும்வர்க்கத்திற்கு அடங்கும் முன்பே அக்டோபர் 31 ஐ தொடர்ந்து நவம்பர் 1 ஆம் நாள் வந்துவிட்டது. தார் கமிசனும் அதை தொடர்ந்து நேரு, படேல் குழுவும் விரும்பிப், பரிந்துரைத்தது போல், மொழிவாரி மாநிலங்கள் அமைக்காமலே காலத்தை தள்ளிப் போட முடியவில்லை. படேல் மறைந்து 6 ஆண்டுகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு 29 மாநிலங்கள் இருக்கின்றன.

படேல் காஷ்மீருக்குள் இறக்கிவிட்ட இராணுவம் இன்றைக்கு வரை வெற்றி அடையவில்லை. படேல் அன்று தொடங்கி வைத்த அடக்குமுறைக்கு எதிரானப் போரை இன்றும் காஷ்மீரிகள் எதிர்கொண்டு வருகிறார்கள். துப்பாக்கிகளைக் கொண்டு மக்களை வெற்றி கொள்ள முடியவில்லை. வாக்கு சாவடிகள் காத்து வாங்குகின்றன. படேலினின் இந்தியாவின் போலி ஜனநாயகத்திற்கு காஷ்மீரிகள் வாக்குகளைத் தர மறுக்கிறார்கள். மாறாக படேலின் ஒடுக்குமுறைக்கு எதிராக உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலங்களே கூடாதென்ற ஆளும் வர்கக்த்தின் விருப்பம் நிறைவேறவில்லை. இன்றைக்கு இவை அதிகாரமற்றவையாக இருப்பது உண்மைதான். அவை அதிகாரம் பெற்று சிறக்க இன்னும் நிறைய இரத்தம் சிந்த வேண்டியுள்ளது. படேலின் வாரிசுகளுக்கும் பொட்டி ஸ்ரீராமுலுவின் வாரிசுகளுக்குமான போராட்டம் இன்னும் முடியவில்லை. அதன் முடிவில் படேலின் சிலை இருக்கும், படேலின் இந்தியா இருக்கிறதா? என்று பார்ப்போம்!

படேலின் சிலை, ”அடுத்த தலைமுறையினருக்கு இந்தியாவை துண்டாட முயற்சித்தவர்களின் சதியை முறியடிக்கும் புனிதமான காரியத்தை மேற்கொண்டவரையும் அவரது திறன்களையும் துணிச்சலையும் நினைவுகூர்வதாக அமையும்” என்று மோடி சொல்லியுள்ளார்.  தேசிய இனங்களின் மாபெரும் சிறைக்கூடமாக இருந்த இந்திய நிலப்பரப்பில் தேசிய இனங்களைத் துப்பாக்கி முனையில் ஒடுக்க முனைந்து தோற்றுப் போனவர்களுக்கு எல்லாம் சேர்த்த குறியீடாக, உலகின் மாபெரும் சிலையாக படேலின் சிலை உள்ளது என்று வருங்கால உலகம் வரலாற்றை மதிப்பிடும்.

  • செந்தில், இளந்தமிழகம்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW