இந்திய அரசே! சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு! சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு!

28 Oct 2018

இந்திய விரிவாதிக்க நலனில் இருந்து ஈழத் தமிழர் வாழ்வைப் பகடைக் காயாக உருட்டி விளையாடாதே! தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானங்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக ஏற்று நட!

 

அக்டோபர் 27 அன்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமர் பொறுப்பில் இருந்து இரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு மகிந்த இராசபக்சேவை அப்பொறுப்பில் அமர்த்தினார். இது இலங்கையின் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதென இரணிலும் இலங்கையைச் சேர்ந்த சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச மாந்த உரிமை சட்டங்களை காலில் போட்டு மிதித்த இனவெறி இலங்கை அரசியலில் இப்போது அந்நாட்டு அரசமைப்புமே மிதிபடுவது நடந்து கொண்டிருக்கிறது. தானே பிரதமர் என்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தான் மெய்பிப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார் இரணில். ஆனால், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவோ நவம்பர் 16 வரை இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கும் ஆணையை நேற்று பிறப்பித்துவிட்டார். இது சிங்களப் பேரினவாத ஆளும்வகுப்புகளுக்கு இடையிலான முரண்பாடு என்பதோடு இதன் புவிசார் அரசியல் பரிணாமமும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்தமை, நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடைய செய்தமை, நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி அடைந்தமை உட்பட பல விடயங்களின் அடிப்படையில் பிரதமரைப் பதவி நீக்க தாக்கம் செலுத்தியுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. மத்திய வங்கியின் ஆளுநராக இரணில் விக்ரமசிங்கேவால் நியமிக்கப்பட்ட சிங்கப்பூர்காரர் கடன் பத்திரங்கள் விற்பனையில் தனது மருமகன் பலனடையும் வகையில் செய்திகளைக் கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இது இரணில் மேல் உள்ள பொருளாதார குற்றச்சாட்டு. அதே நேரத்தில் தேசப் பாதுகாப்பு வீழ்ச்சி அடைந்தமை என்ற குற்றச்சாட்டு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தேசப் பாதுகாப்பு வீழ்ச்சியடையும் வகையில் இரணில் செய்தது என்ன? பத்து நாட்களுக்கு முன்பு அக்டோபர் 16 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய உளவுத்துறை தன்னைக் கொல்ல முயன்றது தொடர்பான வழக்கின் விசாரணையில் இரணில் உரிய கவனம் செலுத்தவில்லை என இரணில் விக்ரமசிங்கேவைக் கடிந்து கொண்டார் மைத்ரி. மேலும் மைத்ரியை மட்டுமின்றி முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய இராசபக்சேவையும் கொல்லத் திட்டமிட்டுள்ளது இந்திய உளவுத்துறை என்று பேசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைப் பராமரிப்பு தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது பற்றியும் எதிர்ப்பு தெரிவித்தாக ’இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய உளவுத்துறை மைத்ரியைக் கொல்ல முயன்றதென மைத்ரி சொன்னதாக ‘இந்து’ வில் வெளியான செய்தி பொய்யென இந்திய அரசை அணுகி இதை முற்றாக மறுத்தார் மைத்ரிபால சிறிசேனா. இதை தொடர்ந்து இந்தியா வந்த இரணில் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார திட்டங்கள் மெதுவாக நகர்வதற்கு அதிபர் சிறிசேனாவே பொறுப்பென்றும் அது தொடர்பில் இந்திய பிரதமர் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

சிறிசேனா, ரணில் முரண்பாடு அண்மைய சில மாதங்களாக இலங்கை அரசியலில் அறியப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதைத் தாண்டி அதிபர் மைத்ரியையும் கோத்தபய இராசபக்சேவையும் இந்திய உளவுத்துறை கொல்ல முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடந்து போகக் கூடிய ஒன்றல்ல. ஏனெனில், இலங்கை அரசமைப்பு சட்டப்படி பதவிக்காலம் முடிவதற்கு முன் அதிபர் இறந்துவிட்டால் உடனடியாகவும் இயல்பாகவும் அப்போதைய பிரதமரே அதிபராகிவிடுவார். எனவே, இன்றைய நிலையில் மைத்ரி கொல்லப்பட்டிருந்தால் ரணிலே இலங்கையின் அதிபர்!  இந்திய உளவுத்துறையால் முன்னெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் கொலை முயற்சியின் உடனடி பயனீட்டாளராக ஆகியிருக்கக் கூடியவர் இரணிலே. எனவே, மேற்கூறியவற்றில் உள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கு அப்பால், இரணிலும் இந்தியாவும் சேர்ந்து மைத்ரியைக் கொல்லப் பார்த்துள்ளனர் என்றளவில் ஒரு செய்தி சிங்கள மக்களுக்கு இறக்கிவிடப் பட்டுள்ளது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ரணில் மீதான இத்தகைய ஒரு குற்றச்சாட்டு தேசத் துரோகம் என்பதைவிட உயர்ந்தபட்ச தேச துரோகம் என்ற வகையில் அமையக்கூடியதாகும்.

முதலாவது பார்வையில் இரணிலின் பதவி பறிப்பு இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆனால், எழுதப்பட்ட சட்டங்களைவிட எழுதப்படாத சட்டங்களே இறுதியானதும் தீர்மானகரமானதுமாகும். எடுத்துக்காட்டாக, சபரிமலை கோயிலுக்குள் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பைவிட எழுதப்படாத சட்டமான 10 வயதுக்கு உட்பட்ட 50 வயதுக்கு மேலான பெண்களே செல்ல முடியும் என்பதே இறுதியானதாக இருக்கிறதல்லவா? வரதட்சணை தடுப்புச் சட்டம் இருந்தாலும் அதைப் பற்றிய எந்த தன்னுணர்வும் இன்றி அது நாடெங்கும் அன்றாடம் மீறப்பட்டு வருகிறதல்லவா? இலங்கையைப் பொறுத்தவரை பெளத்த மகாசங்கங்களே அதிகார மையமாகும். போரின் வெற்றி நாயகன் இராசபக்சேவைப் பிரதமராக்குவதற்கும் இது இந்தியாவின் விரிவாதிக்கத்திற்கு எதிரானது என்பதும் மகாசங்கங்களை இராசபக்சேவின் பக்கம் நிற்கச் செய்ய போதுமானதாகும். மகாசங்கங்கள் நிற்கும் பக்கதில் தான் இராணுவம் நிற்கும். மகாசங்கங்களின் கட்டளையை மீறி இலங்கை நீதித்துறை நகர்ந்துவிட முடியாது. எனவே, இரணில் நீதிமன்றத்தை அணுகினால் அவருக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.

95 இடங்களைப் பெற்றுள்ள இராசபக்சே- மைத்ரி கூட்டணி பெரும்பான்மையை மெய்பிப்பதும் கடினமானதல்ல. தமிழர்களின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சாராமலே இதை இராசபக்சே செய்து காட்ட முடியும். இந்தியாவின் கட்டளையை மீறி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முடிவு எடுக்காது என்ற புறநிலை மெய்ம்மையை வைத்துப் பார்த்தால்,  அதிரடியாக இராசபக்சேவை பிரதமராக்கி இருப்பது தமிழர்களைச் சாராமல் செய்து முடிக்கக் கூடிய சாத்தியப்பாடுகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவாகும். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தே சிலரை உடைத்து எடுப்பது இராசபக்சேவால் முடியும். அதுதான் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. மேலும் நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை மைத்ரி ஒத்திப் போட்டிருப்பதும் இராசபக்சே பெரும்பான்மையை காட்டுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் தான்.

எனவே, அரசமைப்புச் சட்டத்தை விட எழுதப்படாத சட்டமே மேலோங்கி நிற்கும் என்பதும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சாராமல் இராசபக்சேவால் பெரும்பான்மையை மெய்ப்பிக்க முடியும் என்பதும் கண்முன் விரியும் வரைபடமாக உள்ளது.

இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளில் சீனாவின் பங்கு என்ன? என்பதை அறுதியிட்டுச் சொல்லக் கூடிய செய்திகள் இல்லை. ஆனால், மைத்ரி-இராசபக்சே கூட்டணியின் இந்நகர்வு இந்தியாவை எதிர்த்தோ அல்லது இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாகவோ நடந்துள்ளது என்பதை கடந்த இருபது நாட்களின் அரசியல் நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்த அரசியல் அதிரடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் நிலையில் இந்தியா வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை அல்லது கருத்து தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் கூட்டறிக்கை அனைத்து தரப்பாரும் இலங்கையின் அரசமைப்பு சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் வன்முறையை கையில் எடுக்க கூடாதென்றும் சொல்வதுடன்  முடித்துக்கொண்டன. அமெரிக்காவைப் பொறுத்தவரை, ‘ அனைத்து தரப்பாரும் இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும், வன்முறையில் இருந்து விலகி நிற்க வேண்டும், சட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று  சொன்னதுடன் மனித உரிமகள், பொறுப்புக்கூறல், சீர்திருத்தங்கள், நீதி மற்றும் மீளிணக்கம் தொடர்பில் ஜெனீவாவில் ஒப்புகொண்வடற்றிற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்றும் சொல்லியுள்ளது.

இதற்கு முன்னதாக அக்டோபர் 19 அன்று இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்துள்ளது. கடந்த திசம்பரில் ஆப்பிரிக்க நாடான மாலிக்கு அனுப்பட்ட ஐ.நா. வினது அமைதிப் படையில் இலங்கைப் படையினர் சென்றிருந்தனர். அது குறித்து இலங்கைப் பெருமிதம் அடைந்திருந்தது. அதற்கு தலைமையேற்று சென்றிருந்த கர்னல் கலன அமனுபுரேவை திரும்பப் பெறுமாறு அக்டோபர் 19 அன்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் கர்னல் கலன அமனுபுரே இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகும். இலங்கை அரசும் வேறு வழியின்றி அவரை மாலியில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. இது தற்செயலானது அல்ல. இலங்கையில் எழுச்சிப் பெற்றுள்ள இராசபக்சேவுக்கு ஐ.நா. வின் வழியாக அமெரிக்கா விடுத்துள்ள கடுமையான செய்தியாகும். ஆனால், இச்செய்தியையும் மீறி சிங்களப் பேரினவாதத்தின் கடும்போக்கான அரசியல் ஆற்றலான இராசபக்சே பிரதமராகியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் என்று மைத்ரி-ரணில் கூட்டணி அரசை உயர்த்திப் பிடித்தன மேற்குலக நாடுகள். அதன் பெயரால், இலங்கையின் பன்னாட்டு சட்டமீறல்கள் குறித்த புலனாய்வை நான்காண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தள்ளிப் போட்டுவந்தன. இதன் பெயரால், ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு நீதியை மறுத்தும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்பைத் தொடர்வதற்கும் பச்சைக் கொடி காட்டி வந்தன. ஆனால், சிங்களப் பேரினவாத ஆற்றல்கள் எழுச்சிப் பெற்று வந்துள்ளதை பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டின.

புவிசார் அரசியல் நகர்வுகள், கொழும்பு, தில்லி, வாசிங்டன் போன்ற அதிகார மையங்களின் விருப்பங்களும் எதிர்ப்பார்ப்புகளும் எத்தகையனவாக இருந்தாலும் திசை வழியைத் தீர்மானிப்பதற்கான அடித்தளமிடுவது கோடிக்கணக்கான மக்கள் திரளே ஆகும். சிங்களப் பேரினவாத செல்வாக்கினில் இருக்கும் சிங்கள மக்கள் திரளின் விருப்பங்களே இலங்கை தீவின் அரசியலின் திசை வழியைத் தீர்மானித்து வந்துள்ளது. இராசபக்சேவை வரலாற்று மன்னன் துட்டகைமுன்னின் 21 ஆம் நூற்றாண்டின் பதிப்பாக காண்கின்றனர் சிங்கள மக்கள்.

இந்திய அரசைப் பொருத்தவரை இந்திய பெருங்கடலின் மீதான ஆதிக்கத்துக்கான அமெரிக்க வல்லாதிக்க – இந்திய விரிவாதிக்கத்தின் மூலவுத்தி ரீதியான கூட்டணியின் கண்ணோட்டத்தில் இருந்தே இலங்கை தொடர்பான   வெளியுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் உலகெங்கும் சுற்றித் திரிந்து அமைதியைப் பற்றி பொய்ப் பரப்புரைகளை செய்து கொண்டே இன்னொரு புறம் அண்டை நாட்டு அதிபரை கொல்ல முயன்றது என்ற குற்றச்சாட்டை பெற்றுள்ளது இந்தியா. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு துணை போனது மட்டுமின்றி இனக்கொலையாளர்களை பன்னாட்டு மன்றத்தில் பாதுகாக்கும் வேலையை செய்து வந்தது. அதுவும் தன் சொந்த நாட்டில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும், அந்த மக்களின் ஒருமித்த கருத்தாக அவர்தம் சட்டமன்றத்தில் இன அழிப்புக்கு நீதி கோரி இயற்றப்பட்ட தீர்மானங்களைப் புறந்தள்ளியது இந்திய அரசு. ஈழத் தமிழரின் வாழ்வைத் தனது விரிவாதிக்க கொள்கையின் பகடைக்காகப் பயன்படுத்தி வந்திருக்கிறது இந்திய அரசு. இனியும் இப்போக்கை தமிழ்நாடு பொறுத்துக் கொள்ள முடியாது. இப்போது சாதித்து வரும் கள்ள மெளனத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்தப் பேரினவாத கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும். இலங்கையில் சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வெளிப்படையாக வலியுறுத்த வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தில் நீதியை நிலைநிறுத்தக் கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும், பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் நீதியை உறுதி செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தல்களை உள்வாங்கி அதற்கேற்ப இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்த வேண்டும். இதை செய்யத் தவறும் பட்சத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து மென்மேலும் அயன்மைபட நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

 

  • செந்தில், இளந்தமிழகம்

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW