நீட் – சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும்  –  ஸ்ரீலா   

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)

 

மே – ஜூன் மாதங்கள் வந்தால் உயர்கல்வி அறிஞர்களின் கவனம் தென்கொரியா மீதும் சீனா மீதும் குவிவது வருடாந்திர சடங்காகவே மாறியுள்ளது. தென்கொரிய ‘சுன்னியூங்’  (கல்லூரி அறிவுத்திறன் நுழைவுத் தேர்வு) நடைபெறும் நாளன்று, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வணிக மையங்கள் மூடப்படும், 8 மணி நேர தேர்வின் நடுவே செவிவழி கேள்விகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் விமானங்கள் இயங்கும் நேரம் மாற்றப்படும், இலவச டாக்ஸி சேவைகளை  காவல்துறையே  மாணவர்களுக்கென  ஒருங்கிணைக்கும். இதேபோல் இலட்சக்கணக்கான மாணவர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியைச் சிறைப்பிடித்திருக்கும் சீனாவின் ‘கவொகவோ’  தேர்வுக்கு பயிற்சிப்பெறும் சிறுவர்களிடம் தங்கள் பெற்றோர்கள் மரணித்துவிட்ட உண்மையைக்கூட மறைப்பது சர்வசாதாரணமான நடைமுறை. விடைத்தாள் மோசடிக்கான அதிநவீன மின்னணு தொழில்நுட்பச் சந்தை ‘கவொகவோ’ தேர்வை மட்டுமே நம்பி பல ஆயிரம் கோடிகள்  மதிப்புக்கு சீனாவில் வளர்ந்துள்ளது. மோசடியில் சிக்கிக்கொள்ளும் மாணவர்களைக் கடுமையானக் குற்றப்பிரிவுகளின்கீழ் தண்டிக்கும் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இலவச அரசு கல்லூரிகளில் இடம்பிடிப்பதற்கென்றே தனியார் பயிற்சி நிறுவனங்களிடம் ஆண்டுக்கு 15-20 பில்லியன் டாலர்களை வாரியிறைப்பதில், கடந்த 20 ஆண்டுகள் தொட்டு தென்கொரியாவுக்கே முதலிடம்.

 

ஒரு மாணவரின் எதிர்காலத்தையே பணயமாக்கும் ஒற்றைத்தரப்படுத்தப்பட்ட  கடினப்போட்டித் தேர்வுகளின் உலகளாவிய வரிசையில் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வை (NEET – நீட்) இணைத்தது மட்டுமல்லாமல், அதனை முழுவீச்சில் முன்னிலைப்படுத்துவதாகவே இந்திய முதலாளித்துவ விரும்பிகளின் நடவடிக்கைகள் உள்ளன.  ஒரு தேசிய அளவிலான High Stakes Standardised Test ஐ வடிவமைத்து முடிவுகள் வெளியிடுவதுவரை நிர்வகிக்க வேண்டிய அதிகாரத்தை ஒரு மைய்யப்படுத்தப்பட்ட அரசு நிறுவனத்திடம் ஒப்படைப்பது சர்வதேச நடைமுறையாக இருந்து வருகிறது. தற்போது இந்தியாவுக்கென ஒற்றைத் ‘தேசிய பரிசோதனை நிறுவனம் (National Testing Agency) அமலுக்கு வந்துள்ளதும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒன்றே. பரந்துவிரிந்து பன்முகமாக வாழ்ந்தாலும், உலக மக்களை ஒரே பொருளாதார அச்சில் இடப்பட்ட அலகுகளாக வார்த்தெடுப்பது கார்ப்பரேட்  உலகமயமாக்கலின் சாரம். அரசுகளின் மொழியில் இதுவே “உலகத்தரம்”.  ’நீட்’  இன் “உலகத்தரமும்” இதில் அடக்கம். .

 

2017  மருத்துவ இளங்கலைப் படிப்புக்கான சேர்க்கையில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்களும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்களும், நீட் தேர்வில் மிக சொற்பமான மதிப்பெண் பெற்ற மாணவர்களால் பெரும்பாலும் நிரப்பப்பட்டுள்ளது. 700 க்கு 130 மதிப்பெண்கள் இருந்தாலே போதும், கல்லூரி கட்டணமாக 1 கோடி ரூபாய்  வரை செலுத்தும் பணபலம் இருந்தால் கையில் மருத்துவ பட்டம்  என்ற அடிப்படையில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி ஏலம் தொடர்கிறது. இதற்கும் ஒருபடி மேலேபோய், பொன்னையா ராமஜெயம் அறிவியல் மையம் போன்ற தனியார் கல்லூரிகளில், நீட்  பக்கம் எட்டிக்கூட பார்க்காத மாணவர்களும் 60 இலட்சத்துக்கு விற்கப்படும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். நிகர்நிலை பல்கலைக்கழக மற்றும் சுயநிதி நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் இரண்டுமே மத்திய மருத்துவ சேவைகள் இயக்குனரகம் நியமிக்கும் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவால் நிரப்பப்படும் என்பது நீட் சட்டத்திருத்தத்தின் முதன்மை அம்சம். தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் கறாரான வெளிப்படைத்தன்மையும் தரமும் நீட் வழியாக உறுதி செய்யப்படும் என்பதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகவே இருந்தது. ஆனால், யதார்த்தத்தில், நீட்  ஓ அல்லது +2  பொதுத்தேர்வு முடிவுகளோ, தனியார்மயக் கல்வி வியாபாரத்தையம் கட்டணக் கொள்ளையையும் கண்டும் காணாமல் இருக்கும் அரசின் வக்கற்றத்தனத்துக்கு பலியாகும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரிக்கிறது. 350 க்கு மேல் நீட் தேர்வில் மதிப்பெண் எடுத்தும் பொருளாதார வசதியற்ற மாணவர்களால் தனியார் கல்லூரிகளில் சேர முடிவதில்லை. ஆக, மருத்துவக் கலந்தாய்வுக் குழுவால் தரப்பட்டியலின்படி நிரப்ப முடியாமல் போகும் இடங்கள், எந்த கண்காணிப்புமின்றி தனியார் நிர்வாகத்திடமே திருப்பி அளிக்கப்படுகின்றன. தகுதி மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும்போதே, பெரும் பணக்காரப் பிரிவினரின் வாய்ப்புகள் பறிபோகாதவாறு பாதுகாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் நியாயமாகவே எழுகிறது. 3 ஆண்டுகளில் மட்டும்,  நீட் முடிவுகளின் தரவரிசைப் பட்டியலைப் பின்பற்றாமல் தனியார் மருத்துவக்கல்வி நிறுவனங்களால் சட்டவிரோதமாக  நிறைவேற்றப்பட்ட 500க்கும் மேலான மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற ஆணையின்படி, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்குச் சொந்தமான 50% மருத்துவச் சேர்க்கை இடங்களை அந்தந்த மாநில அரசாங்கங்கள் கைப்பற்றி நிரப்பவேண்டும். தொடர்ச்சியாக இதை செய்ய மறுக்கும் தமிழக அரசாங்கத்தின் பொறுப்பற்றத்தன்மையைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தும் பயனில்லை. தனியார் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கப்போகும் பணக்காரர்களுக்கு நீட் தேர்வின்  மதிப்பெண்கள் ஒரு பொருட்டே இல்லை, மாறாக ஏழை நடுத்தர வர்க்க மாணவர்களுக்கோ நீட்  தலைமேல் தொங்கும் கூர்வாள் என்ற இரட்டைக் கல்வி முறை எப்போதும் போல் நீடிக்கிறது.

 

சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒரு குறுகிய பிரிவினருக்காக நீட் அரங்கேற்றும் கண்துடைப்பு ஒன்றே அதன் நீண்டகால உள்ளடக்கம் அல்ல. ஒருபுறம் வணிகத்தொழில் துறைகளை மாதிரியாக கொண்டு மருத்துவ, சுகாதார சேவைகளும்  பொதுத்துறை – தனியார் ஒப்பந்தங்களின்கீழ் கார்ப்பரேட்மயம் ஆகிக் கொண்டிருக்கின்றன. அதற்கு இசைவாக, கல்விக்கூடங்களும் பல்கலைக்கழகங்களும் பிழைப்புவாதத்தையே பாடமாகப் புகுத்தும் எதேச்சதிகார சூழலில், குறிப்பிட்ட தன்மையிலான ஊழியர்களை உற்பத்தி செய்வது முன்நிபந்தனையாகிறது. வயதுக்குரிய குறைந்தபட்ச கற்றலை எளிமையாக சோதித்துப் பார்த்து, இடர்பாடுகளைக் களைவதற்கான சோதனைமுறை என்பதே பொதுத்தேர்வுகளின் வரையறை. ஆனால், கடினப் போட்டித்தேர்வுக்கு தயாராவதைப் போல் பொதுத்தேர்வுக்கு தயாராவதை நாமக்கல் கோழிப்பண்ணை வகையறா தனியார் பள்ளிகள் அறிமுகப்படுத்தின. அதன் விளைவுகள் –  ஈரோடு நாமக்கல் மாவட்டங்களை மையப்படுத்தி பெருகிய மாணவத் தற்கொலைகள், அரசு பள்ளிக்கூடங்களும் கார்ப்பரேட் கோழிப்பண்ணைகளின் ”வெற்றி வாய்ப்பாட்டுக்கு” ஈடுகொடுக்க வேண்டிய அவலநிலைமை, அப்படி  ஈடுகொடுக்காவிட்டால் இழுத்து மூடப்படும் அபாயம் ஆகியவையாகும். நீட் பயிற்சி மையங்களின் மீள முடியாத தாக்கமாக, நீட் போன்ற தேர்வுகளின் உள்ளடக்கமாக நாம் உணரப்போவதும் இதைத்தான்.

 

விமர்சனப் பண்புகளை மழுங்கடிக்கும், சுயசிந்தனையைப் புறக்கணிக்கும்  ” மாணவர்களின் உயர்கல்வி முடிவுகளைத் தீர்மானிக்கும் தரப்படுத்தும்  தேர்வு” (High Stakes Standardised Testing) முறைகளைஅமெரிக்க ஐரோப்பிய ஆசிரியர்களும் பெற்றோர்களும் நிராகரித்துவிட்டனர். உயர்கல்விப் பரிசோதனை பெருநிறுவனங்களின் சந்தை மதிப்பு அமெரிக்காவில் மட்டுமே 1.7 பில்லியன் டாலர்களை எட்டியது. அங்கு வீழ்ச்சியடையும் பன்னாட்டுப் பரிசோதனை நிறுவனங்களும் கல்வி முதலீட்டாளர்களும் புதிய சந்தைகளின் திசையிலேயே சாய்வார்கள். நீட் தேர்வைப்  போன்ற கல்வி வாய்ப்புகள் விளிம்புநிலை மனிதர்களுக்கான சமூக-பொருளாதார ஏணிப்படியாக அமையும் என்று சமூக நீதியையும் ‘சந்தை வியாபாரக் குறி(market brand)’ ஆக்குவார்கள். அசாதாரணமான உழைப்புக்கும் அசாத்தியக் கட்டுப்பாட்டுக்கும் வளையும் அரசுப்பள்ளி மாணவர்களை மட்டும் சல்லடையில் சலித்தெடுத்து “சூப்பர் 30” ஆகக்கூட மாற்றுவார்கள்.

எனினும், நமது பிள்ளைகளின் கனவுகளை அவர்களின் வண்ணங்கள் நிரப்பாமல் இருக்க சற்று விழித்திருப்போம்.

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW