இந்திய மோடி அரசே! கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை!
கேரள மலையாளத் தேசிய இன மக்கள் கணக்கிட முடியாத பேரழிவைச் சந்தித்துள்ளனர். தண்ணீர்.. தண்ணீர்..எங்கு பார்த்தாலும் தண்ணீர்! சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருந்த வீடுகள், கூரைக் குடிசைகள் தொடங்கி, காரைவீடுகள், மாடிவீடுகள் வரை இடிந்து தரை மட்டமாகியுள்ளன. உடமைகள் அனைத்தையும் இழந்து முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாலங்கள் உடைந்து முக்கியச் சாலைகள், கிராமச்சாலைகள்அனைத்தும் பழுதடைந்துள்ளன. தமிழ்நாடு தனது சக்தியனைத்தையும் திரட்டி மலையாளத் தேசிய இன மக்களுக்கு தோள் கொடுத்து வருகிறது. பாதிப்பை உணர்ந்தவர் அனைவரும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர். மோடியின் இந்திய அரசு முதலில் 100 கோடி பின்னர் 500 கோடிகள் அறிவித்துள்ளது. கேரளாவைப் புதியதாகப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. புனரமைக்கத் தேவையோ பல ஆயிரம் கோடிகள். இந்திய அரசு அறிவித்துள்ளதோ சில நூறு கோடிகள் மட்டுமே. வெளிநாடுகள் கேரளப் பேரழிவுத் துயர் துடைக்க உதவிக் கரம் நீட்டுகின்றனர். அரபு அமீரகம் 700 கோடிகள். இதர நாடுகள் சில நூறு கோடிகள். பல நாடுகளில் தமிழர்களும், மலையாளிகளும் பணியாற்றுவதால் மட்டுமில்லை. மனிதம் தனது உலகளாவிய உதவிக்கரத்தை மலையாளி, தமிழன், குஜராத்தி, வங்காளி, காஷ்மீரி என யார் பாதிக்கப்பட்டாலும் பேரழிவுக் காலங்களிலெல்லாம் தோழமையை வெளிப்படுத்துவது வழக்கம். ஆட்சியேறிய காலந்தொட்டு நாடு நாடாகப் பயணம் செய்து அந்நிய மூலதனத்தை இந்தியப் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கொண்டு வந்து குவிக்கும் மோடி அரசு கேரளத்திற்கான மனிதாபிமான உதவிகளுக்குத் தடை விதிக்கிறது. இந்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகள் என அழைக்கப்படும் கங்காணி அரசுகள் நேரடியாக அந்நிய மூலதனத்தை இறக்குமதி செய்யலாம். அந்நிய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் போடலாம். பன்னாட்டு, இந்திய முதலாளிகளின் தேவைகளுக்கு அந்நிய மூலதனத்திற்கு கதவு திறக்கலாம். மக்களுக்காக நாம் கேட்காமலேயே கிடைக்கும் மனிதாபிமான உதவிகளைப் பெறவிடாமல் மோடியின் இந்திய அரசு தடுப்பதும், அதற்கு இறையாண்மையைக் காரணம் கூறுவதும் அதிகாரத் திமிரானதுமாகும். மதக்கலவரத்திற்காக கோடிக்கணக்கான நிதியை வெளிநாடுகளிலிருந்து பெறும் ஆர்.எஸ்.எஸ், பா.ச.க, சங்பரிவார காவி பயங்கரவாத அமைப்புகள் இறையாண்மையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கேரளாவின் இறையாண்மையை, தமிழ்நாட்டின் இறையாண்மையைத் தீர்மானிக்கும் இந்திய அதிகாரத்தை கேள்வி கேட்டாகவேண்டும். அந்நிய முதலீடுகளை கேரளாவிலிருந்து, தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும். ஆளும் வர்க்கத்தினருக்கான, போலித்தனமான இந்தியக் கூட்டாட்சியை நம்பிக் கொண்டிருக்காமல், மலையாளத் தேசிய இறையாண்மை, அதிகாரம் நோக்கிய அரசியலை, புதிய கேரளாவைப் புனரமைக்கும் கடமையோடு இணைத்து முன்னெடுக்க வேண்டியது அவசியம். ஒற்றை மொழி, ஒற்றைக் கல்வி, ஒற்றைத் தேர்வு, ஒற்றை வழிபாடு, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அதிகாரம், ஒற்றை அரசுக்கு எதிராக மக்கள் சனநாயகத் தேசியஇனக் குடியரசுகளை உருவாக்குவோம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 9443184051