தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

08 Aug 2018

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

நிறைந்த வாழ்வு. மரணம் மனிதனின் வாழ்ந்த வாழ்வை அசை போடுவதோடு தொடங்குகிறது. ஒரு சமூக இயக்கத்தின் பகுதியாய் வரலாற்றில் தனிமனித ஆளுமைகள் தோற்றம் பெறுகிறார்கள். மக்சீம் கார்கி, ’தனிநபர் பாத்திரம்’ என்ற நூலில் சமூக கூட்டு மொத்தமாய் இருக்கின்ற மனிதர்களின் விருப்பத்தை நிறைவு செய்கின்ற மனிதர்களை வரலாறு தனிநபர் பாத்திரம் என்கிற ஆளுமையோடு தேர்வு செய்கிறது என்பார். கருணாநிதியும் நூற்றாண்டாய் தமிழகத்தில் செல்வாக்கு செலுத்திவரும் மாபெரும் திராவிட சமூக அரசியல் பண்பாட்டு இயக்கத்தின் பகுதியாய் பிறந்தவர். அவ்வரலாற்றை ஐம்பதாண்டு காலமாய் வழிநடத்திச் செல்கின்ற தனிநபர் பாத்திரம் என்ற ஆளுமையோடு நின்றவர் என்ற அரசியல் உணர்வோடு காய்தல், உவத்தல் இன்றி சரி, பிழைகளைப் பதிய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

இன்றைக்கு கருணாநிதியின் இறப்பைக் கொண்டாடுவதற்காக ஒரு கூட்டம், அவரைப் புனிதப்படுத்துவதற்காக ஒரு கூட்டம் என தர்க்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. நாம் இரண்டிற்கும் அப்பாற்பட்டவர்கள். இயற்கையோடும் காலத்தோடும் கலந்துபோன மனிதர்களின் வரலாற்றுப் பங்களிப்புகளையும் எதிர்மறையாக அவரிடம் கற்க வேண்டியதையும்தான் பேசுகிறோம். ஏன் இந்த தனி மனிதனை இந்தப் புலத்தில் வாழ்கின்ற மனிதக் கூட்டம் தலைவனாகத் தேர்வு செய்தது, முரண்படுகின்ற நேரத்தில் வனவாசத்திற்கு அனுப்பி வைத்தது என வரலாற்றில் முரண்படுகின்ற கேள்விகளை சந்திக்காமல் நமக்கு தெளிவு இல்லை. புறநிலையாய் உருண்டோடி கொண்டிருக்கிற தமிழக அரசியலோடும் வரலாற்றோடும் நமது சித்தாந்தங்களும் கருத்துகளும் உரசிக்கொள்ளும் தருணம் இதுதான்.

பெரியார், அண்ணா, கலைஞர் என்ற மூன்று மாபெரும் ஆளுமைகள் திராவிட இயக்கத்தின் பகுதியாய் நின்று நவீன தமிழ்ச் சமூக வரலாற்றை வடிவமைத்தவர்கள். பொதுவுடைமை இயக்கம் தொடங்கி தலித் இயக்கம் வரை நவீன தமிழ்ச்சமூக முழுமைக்குப் பங்காற்றி இருக்கின்றன. ஆனால், சுக்கானைப் பிடித்துக் கட்டுப்படுத்தி வழிநடத்தியவர்கள் திராவிட இயக்கதினரே, பொறுப்பேற்க வேண்டியவர்களும் அவர்களே. பகுத்தறிவு, சமூக நீதி, மாநில உரிமை என மேற்குலக நவீனத்தின் தமிழ்ப் பிரதியாக இத்துணைக்கண்டனத்தின் தெற்கில் இருந்து எழுந்து புதிய அலையைத் தோற்றுவித்தவர்கள். பெரியார் நவீனத்தின் பிரதிநிதி என்றால் கருணாநிதி மரபும் நவீனமும் கலந்த பிரதிநிதி அதனால் தான், ஒரு கட்டத்தில் மரபு அனைத்தையும் நிராகரித்த இயக்கம் இன்னொரு கட்டத்தில் நவீனம் தேய்ந்த மரபோடு கலந்த கவர்ச்சிக் கலையாக மாறிப்போனது. இந்த இரண்டுக்கும் இடையிலான இசையின் லயத்தை சுருதி பேதமின்றி கோர்த்தவர்தான் கலைஞர்.

வர்க்கம் முதன்மை சிக்கல் இல்லை, சாதிதான் என கம்யூனிச இயக்கத்தை விமர்சித்து ஆட்சியைக் கைப்பற்றிய இயக்கம், சாதிப் பொறியமைப்பை நுட்பமாக கையாளுகின்ற அளவுக்கு ’தேய்ந்து போன சாதி ஒழிப்பில்’ தேர்ச்சிப் பெற்றதும் கருணாநிதியின் ஐம்பதாண்டு காலம்தான்.

சாதியும், மக்கள் குழுக்களும் மட்டுமே சமூகம் என்ற பார்வையும் பார்ப்பனிய எதிர்ப்புக்கும் சமூகநீதி சீர்திருத்தங்களுக்கும் மட்டுமே அரசெதிர்ப்பு என்ற நிலைப்பாடும் அரசு குறித்தும் வர்க்கம் பற்றியும் சுயமான எந்தப் பார்வையும் இல்லாத திராவிட இயக்க சிந்தனைக்கு ஆட்சிமன்றக் கட்டிலை எட்டிப்பிடித்தப் பின்பு அனைத்துமே சறுக்கல்தான். பிரிவினைத் தடை சட்டத்திற்குப் பின்வாங்கி, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது தொடங்கி ஈழப் படுகொலையில் பதவியே மானம் காக்கும் வேட்டியாக நினைத்த அனைத்துமே சறுக்கல்தான். அதனால் தான், மாநில சுயாட்சிக் கோரிக்கையை சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையாக வளர்க்காமல் அகில இந்திய கடைவிரிக்கும் பெருமுதலைகளின் கூடாரமாக மாறிப்போனது கட்சி. ஆட்சிக் கட்டிலில் ஏறியபின் முழுப் பொறுப்பும் கருணாநிதியுடையதுதான். இதற்கு வேறு யாருடைய நெஞ்சிடமும் நீதி கேட்க முடியாது. இதன் ஜனரஞ்சக சீரழிந்த வடிவத்திற்கு வேண்டுமானால் எம்.ஜி.ஆரிடம் நீதி கேட்கலாம்.

இந்திய ஆட்சி, சமூக கட்டமைப்பின் வரம்பிற்குள் கலைஞரின் பங்களிப்பை, வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பிட வேண்டும் என்கிறார்கள் சிலர். தீவிர புரட்சிவாதம் பேசக்கூடாது என்கிறார்கள். நல்லதுதான். அந்தப் பாத்திரத்தில் வேறெந்த மாநிலக் கட்சியின் தலைவரையும் முதல்வரையும்விட இவர் பல நூறு அடிகள் முன்னே நிற்கிறார். மாற்றுக் கருத்தோ, மறுப்போ ஏதுமில்லை. இருநூறுக்கும் மேற்பட்ட சமூக நல அரசு திட்டங்கள், ஆகஸ்ட் 15 முதல்வர்கள் கொடியேற்றுவதற்கான உரிமை எனப் பலதையும் பட்டியலிடுகிறார்கள். இதை சட்டப்பூர்வ சாதுர்யத்தோடு செய்வதில் கலைஞருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இதை நன்றியோடு மறுப்பவர் எவரும் இல்லை. ஆனால், அது மட்டும் போதுமா? என்பதே நமது கேள்வி.

சில இரங்கல் குறீப்புகளைப் பார்த்தேன். வழக்கம்போல இறப்பு இறகைவிட லேசானது என்று போட்டிருந்தார்கள், துரோகத்தைப் பட்டியலிட்டு இருந்தார்கள், இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறுகிய உலகம் சுற்றிசுற்றி வருகிறார்கள். ஆனால், இன்னொன்று வியப்பாக இருந்தது. தீவிரப் புரட்சியாளர்கள், சக இயக்கங்களின் தியாகங்களைக் கேலி செய்தவர்கள், சாரு மஜும்தாரை அழிவுவாதம் என்றவர்கள் கருணாநிதியை அவரின் தனிநபர் பாத்திரத்தை வைத்து மதிப்பிடக் கூடாதென்று சொல்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயா கும்பலின் அட்டூழியங்களுக்கு அஞ்சியா? அல்லது பார்ப்பன எதிர்ப்பில் மிஞ்சியிருப்பது யாரென்ற ஒப்பீட்டாய்வில் இந்த முடிவை வந்தடைந்தார்களா? என தெரியவில்லை. பார்ப்போம். கலைஞருக்கான் இறுதி தீர்ப்பை வரலாறு பகிரட்டும் என்ற எல்லையோடு சில வரலாற்றுக் குறிப்புகளை மட்டும் முன்வைத்து அஞ்சலி குறிப்புகளை நிறைவுசெய்கிறேன்.

பெரியாரியம் தான் தமிழ்நாட்டின் மார்க்சியம் என்றார்கள். நானே ஒரு கம்யூனிஸ்ட்தான் என கலைஞர் சொல்லிக் கொண்டார். ஆனால், என்ன நடந்தது? மார்க்ஸ் முன் வைத்த தத்துவத்தை லெனின் ஒரு நாட்டிற்கான புரட்சித்திட்டமாக மாற்றி ரசிய நாட்டில் புரட்சிகர அதிகாரத்தைக் கைப்பற்றினார். மூன்றாவதாக வந்த, ஆட்சிப் பொறுப்பை வழிநடத்திய ஸ்டாலின் என்ற எளிய பின்புலத்தில் இருந்து வந்த மனிதன், அவர்களின் கொள்கைகளை அமல்படுத்தி முப்பதாண்டுகளில் ரசியாவை உலகின் முதன்மை நாடாக்கினார். எந்த சமரசங்களுக்கும் இடங்கொடாத, அழிவை எதிர்கொண்டு நாட்டை வழிநடத்தினார். இங்கு என்ன நடந்தது?

பெரியார் கொள்கைகளை வைத்தா அண்ணா அதிகாரத்தைக் கைப்பற்றினார்? மகனுக்கு மட்டுமே ஸ்டாலின் எனப் பெயர் சூட்டிவிட்டு மூன்றாவதாக அதிகாரத்தை வழிநடத்திய எளிய பின்புலம் கொண்ட கருணாநிதி என்ன செய்தார்? பெரியாரிடம் இருந்து வேறுபட்டு அதன் நீர்த்துப்போன சமரச வடிவத்தைத்தான் தேர்ந்துகொண்டார் என்பதுதானே உண்மை. ’அண்ணாவிடம் இருந்து அலங்காரத்தையும் மேடை வசனத்தையும் தேர்ந்து கொள்ளாதே’ என்று கலைஞருக்கு பெரியாரே ஒருமுறை சொன்னதாக சொல்லப்படும் அந்த எச்சரிக்கையையும் மீறி அண்ணாவின் நீர்த்துப்போன வடிவத்தைத்தானே கருணாநிதி தேர்வு செய்துகொண்டார்.

நாம் என்ன மாற்று சொல்ல வேண்டியிருக்கிறது? இதற்கு மாறுபட்ட வரலாற்றுச் சுட்டுதலைத் தான் நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது. சீன வரலாற்று உதாரணம் ஒன்றுண்டு. சீன தேசியக் கட்சியைச் சார்ந்த சன்யாட்சன் பெரியாரைப் போல் சோசலிசத்தை, சனநாயகத்தை நேசித்த சீனாவின் நவீன சிற்பி. ஆனால், அவர் இறப்புக்குப்பின் வந்த சியாங்கே சேக் சன்யாட்சன்னின் இலட்சியங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்  துரோகம் இழைத்து பெருமுதலாளிய சக்தியாகவே மாறிப்போனவர். அவ்விடத்தில்தான், சீன மக்களால் நேசிக்கப்ப்ட்ட சன்யாட்சன்னின் கொள்கைகளைக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மூன்று கொள்கையாக வளர்த்தெடுத்து, சியாங்கே சேக்கை விமர்சித்து நாட்டின் நவீனத்துவ ஜனநாயகப் புரட்சியை நிறைவுசெய்தார். இதைத்தான் நமது வரலாற்றுக்கும் தேவையான ஒப்பீடாகப் பார்க்க வேண்டும். அதுதான், கலைஞருக்கும் வரலாற்றுக்கும் நாம் செய்யக் கூடிய உரிய நியாயமாகும்.

கலைஞர் தேர்வு செய்தது புரட்சிகர வழியல்ல, இடைவழி சமரசம். அதை சரிபடப் புரிந்து, அவர்விட்ட இடத்தை விமர்சித்து, அதிலிருந்து முன்னேறுவதுதான் அவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதிகாரத்தில் இருப்பதற்காக திராவிட இயக்கத்தை நெருங்கிடும் அறிவாளி ஒட்டுண்ணித்தனத்திற்கு மாறாக அவருக்கு உண்மையாகவும், உண்மைக்கு உண்மையாகவும் இருக்க முடியும்.

கடையனாய் கடையனின் விடிவுக்கு

எழுந்த சூரியன், மழைவிட்ட

தூவானத்தின் கறையோடு

அந்தி சாய்ந்தது.

கலைஞருக்கு அஞ்சலி.

 

தோழமையுடன்

பாலன்,

பொதுச்செயலாளர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி.

8/8/2018

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW