உச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.!

06 Jun 2018

காவிரி வழக்கில் மே 18 ஆம் நாள் அன்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்பதோடு வழக்குகள் 2453/2007, 2454/2007, 2456/2007 முடிவுக்கு வந்துவிட்டன. ‘பொன்னியின் செல்வி’ என்று காவிரி விவகாரத்தில் பட்டம் சூட்டிக்கொண்ட ஜெயலலிதாவின் வாரிசுகள் வெற்றி விழாவை நோக்கிச் சென்றுவிட்டனர். ’காவிரிக் கொண்டான்’ என்று பட்டம் சூட்டிக்கொண்ட கலைஞரின் வாரிசுகள், தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதோடு முடித்துக்கொண்டனர்.

பிப்ரவரி 16 ஆம் நாள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், அமிதவ ராய் ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற ஆயம் வழங்கியத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் என்று நேரடியாகச் சொல்லவில்லை; மாறாக ‘பொறியமைவு’(ஸ்கீம்) என்று சொல்லி ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்றது. முதலில் ’ஸ்கீம்’ என்றால் என்னவென்று விளக்கம் கேட்டுப் பின்னர் கர்நாடக தேர்தலைக் காரணம் சொல்லி, சாதுர்யமாக கர்நாடகத் தேர்தலின் முடிவு வரும்வரை காலத்தை இழுத்தடித்தது   பா.ச.க தலைமையிலான மத்திய அரசு. மார்ச் 29, மே 3, மே 8 என கெடு தேதிகள் பல கடந்து, மே 14 ஆம் நாள் அன்று வரைவுத் திட்டத்தை முன்வைத்தது மத்திய அரசு. மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடக அரசு எதிர்த்துக் கொண்டிருந்தது.  இந்த வழக்கில், ’மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தான் கட்டுப்பட வேண்டியதில்லை என்பதுதான் மத்திய அரசின் வாதமே. மத்திய அரசு மே 14 ஆம் நாள் அன்று, உள்ளடக்கத்தில் அதிகாரமற்ற ஓர் அமைப்பை முன்வைத்துவிட்டு ஆணையமா? வாரியமா? என்பதை உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு விடுவதாகச் சொன்னது. மே 16 ஆம் நாள் காவிரிச் சிக்கலில் தொடர்புடைய அரசுகளின் விவாதங்கள் நடந்தன. ஒவ்வொரு முறையும் நீர் பாசனம் தொடர்பான விவரங்களை வாரியத்திடம் காட்ட வேண்டும்  என்ற சரத்து மாநில உரிமையை மறுக்கக் கூடியதென்ற கர்நாடகாவின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. வாரியத்தின் தலைவர் பொறியாளராகவோ அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ இருக்கலாம் என்ற முன்வைப்பு தமிழக அரசால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி , வாரியத்தில் உள்ள அதிகாரிகள் நிர்வாகத் துறையைச் சேர்ந்தவர்களாக இல்லாமல் தொழில்நுட்பத் தன்மை ( technical in nature) உடையவர்களாக இருக்க வேண்டும். அதைச் சுட்டிக்காட்டியது தமிழக அரசு. ஆயினும், உச்சநீதிமன்றம் இதை ஏற்கவில்லை. நான்கு மாநிலங்களில் ஏதேனும் ஒன்று இந்த பொறியமைவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் பொறியமைவு மத்திய அரசை அணுகவேண்டும் என்றும் மத்திய அரசு எடுக்கும் இறுதி முடிவுக்கு அம்மாநிலங்கள் கட்டுப்பட வேண்டும் என்றும் வரைவு அறிக்கை சொன்னது. இதை தமிழக அரசு எதிர்த்தது.  உச்சநீதிமன்றம் தமிழக அரசின் எதிர்ப்பை ஏற்றுக்கொண்டது. பொறியமைவிற்கு ’காவிரி மேலாண்மை வாரியம்’ என்று பெயர்வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியது. மத்திய அரசு திருத்தப்பட்ட அறிக்கையை முன்வைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் பணித்தது.

மே 17 ஆம் நாள் அன்று மத்திய பா.ச.க. அரசு வரைவு திட்டத்தில் திருத்தம் செய்து முன்வைத்தது. அதில், மத்திய அரசுக்கு இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு என்பதை நீக்கிவிட்டுப் பொறியமைவின் முடிவை அமல்படுத்த மத்திய அரசு உதவியை நாடலாம் என்று மாற்றியது. எது எப்படியோ, பந்து இறுதியில் மத்திய அரசின் கைக்கு போகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  மத்திய அரசின் ஆணையை மறுத்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் செல்லக் கூடும். ஒரு முடிவற்ற சட்டப் போராட்டத்திற்குள் காவிரி உரிமை சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை விட்டிருக்கிறது தீர்ப்பு.

இந்த பொறியமைவின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என முன்வைத்தது. ஒருநாள் கழித்து மே 18 ஆம் நாள் அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டது.

வரிக்கு வரி பொறியமைவு பற்றி தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் வருவதைப் படியெடுத்து முன்வைத்த மத்திய அரசு, பொறியமைவு தன்னாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதை சாதுர்யமாகப் புறந்தள்ளிவிட்டது.

பக்ரா-பியஸ் மேலாண்மை வாரியத்தைப் போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அப்படி, அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு இல்லையென்றால் இந்த தீர்ப்பு வெற்றுக் காகிதம்தான் என்று தீர்ப்பாயம் குறிப்பிட்டது. பக்ரா-பியஸ் மேலாண்மை வாரியத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் உண்டு. பக்ரா-பியஸ் மேலாண்மை வாரியத்திற்கு ’நிர்வகிக்கும் (administrate), பராமரிக்கும்(operate), இயக்கும்(operate) அதிகாரம் உண்டு. ஆனால், இப்போது அமைக்கப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அத்தகைய அதிகாரம் இல்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலைக் ஏற்று கர்நாடகம்  செயல்படுமா? கர்நாடகாவின் கடந்தகால செயல்பாடுகள் அவ்வண்ணம் இருந்ததில்லை. உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ ஆணைகளை மிகச் சாதாரணமாக நிறைவேற்ற மறுத்ததுதான் கர்நாடகாவின் அடாவடி வரலாறு. இனிமேல், என்ன நடக்கும்? அதிகாரம் அற்ற ஆணையத்தின் வழிகாட்டுதலைக் கர்நாடகா ஏற்கமறுக்கும். ஆணையம் மத்திய அரசிடம் முறையிடும். காங்கிரசோ, பா.ச.க.வோ யார் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் கர்நாடகவின் அடாவடித்தனத்துக்கு முட்டுக் கொடுத்து தமிழகத்தின் உரிமையை மறுப்பது தொடரப் போகிறது. ’மழை பெய்தால் தண்னீர் திறந்துவிடுவோம்’ என்றுதான்  கர்நாடகா முதல்வர் குமாரசாமி சொல்வதன் மூலம் ஆணையத்தின் வழிகாட்டுதல் தமக்கு ஒரு பொருட்டல்ல என்பதைக் கன்னடர்களுக்கும் நமக்கும் தெரிவிக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமைக் கொண்டோர் ஒன்பது பேர். அதில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருவர் என்று நான்கு பேரும் மீதம் ஐவர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள் ஆவர். ஏதேனும் ஒரு மாநிலம் மாற்றுக்கருத்து தெரிவித்தால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். கர்நாடகாவைச் சேர்ந்த உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவிக்கும்விடத்து மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐவரும் கர்நாடகவுடன் சேர்ந்து கொண்டால் முடிவு கர்நாடகாவுக்கு சாதகமாக எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இப்படி, ஓர் அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது சரியா? என்று சிலர் கேட்கலாம். காவிரிச் சிக்கலில் மத்திய அரசின் கால் நூற்றாண்டுகால அணுகுமுறைதான் நம்மை அப்படிப் பார்க்க வைக்கிறது.

மேலும் ஆணையம் பற்றிய வரைவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து மத்திய அரசு மேலும் நீர்த்துப் போகச்செய்யாது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

ஆகவே, 2007 இல் காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் மிக முக்கிய அம்சமான காவிரி மேலாண்மை வாரியம்கூட அமைக்கப்படாமல் காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பல்லற்ற அமைப்பை வாங்கி வந்திருக்கிறது தமிழக அரசு.

மொத்தத்தில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் குறைகண்டு மேல்முறையீட்டுக்குப் போனது தமிழகம். இறுதியில் இருப்பதையும் பறித்துக் கொண்டு வெறுங்கையோடு அனுப்பி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேலாண்மை ஆணையத்தின் குறைகளுக்காக மட்டுமின்றி பிப்ரவரி 16 தீர்ப்பின் அம்சங்களுக்காகவும் தமிழக அரசும் சரி தமிழக மக்களும் ஏற்கக்கூடாது.

காவிரி இந்திய தேசிய சொத்து என்று சொல்வதன் மூலம் காவிரித் தண்ணீரில் நான்கு மாநிலங்களுக்கும் இருக்கும் வடிநிலப் பகுதி உரிமையை(riparian rights) இரண்டாம் பட்சமாக்குகிறது தீர்ப்பு. வழமைக்கு மாறாக ஆற்றுநீர் பங்கீட்டில் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கில் எடுத்ததுடன் கர்நாடகாவின் நிலத்தடி நீரைக் கணக்கில் கொள்ளாமல் தமிழகத்திற்குரிய தண்ணீர் அளவைக் குறைக்கிறது தீர்ப்பு. 1924 ஆம் ஆண்டு சென்னை மாகாணமும் மைசூர் சமஸ்தானமும் தமக்கு இடையே போட்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்கிறது தீர்ப்பு. ஆனால், தீர்ப்பாயம் காலாவதியானதாக சொல்லவில்லை. பிற்காலத்தில் நூலறுந்த பட்டம் போல் தமிழகத்தின் உரிமை ஆகிவிடும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெற்றிடம் உருவாகும். மீண்டும் ஒரு சுழல் வட்டத்திற்குள் காவிரிச் சிக்கல் செல்ல நேரிடும் . பெங்களூரின் தண்னீர் தேவைக்கு முன்னுரிமை தருவதென்பது riparian right வடிநிலப்பகுதியின் உரிமைக் கோட்பாட்டை equitable share சமமானப் பங்கீட்டுக் கோட்பாட்டுக்கு கீழ்படுத்தி வந்தடைந்த முடிவாகும். அதாவது, உழவுக்கான பாசனத் தேவையைப் பெருமூலதன வளர்ச்சிக்கு கீழ்ப்படுத்திப் பெறப்பட்டதாகும். ஹெல்சிங்கி விதிகளைப் பெர்லின் விதிகளுக்கு கீழ்ப்படுத்திப் பெறப்பட்டதாகும். இந்திய அரசின் பெருமூலதன கார்பரேட் வளர்ச்சிக் கொள்கைக்கு காவிரி நீரை மடைமாற்றும் தீர்ப்பாகும்.

இது மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புதான். ஏழு பேர் கொண்ட அரசமைப்பு ஆயத்திற்கு இவ்வழக்கைக் கொண்டு செல்ல சட்டத்தில் இடமுண்டு. தமிழக அரசு இதை செய்ய மறுத்தால்  காவிரி உரிமையை நாம் கைகழுவி விட்டதற்கு ஒப்பாகிவிடும். பிற்காலத்தில் இது மாபெரும் வரலாற்றுப் பிழையாகப் பார்க்கப்படும்.

தமிழ்மக்கள் தமது போராட்டத்தின் வழியாகத் தான் தமிழக அரசை அசைக்க முடியும். காவிரித் தீர்ப்பை மறுத்து அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்திப் போராட்டத்தைத் தொடர்வோம்.

 

  • செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW