தூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் !

22 May 2018

ஸ்டெர்லைட்டுக்கு  எதிராக ஜனநாயக ரீதியாக, சட்டப்பூர்வமாக  100 நாட்கள் போராட்டம் நடந்தது.  இன்று காலை மக்கள் முற்றுகை போராட்டம், பேரணி நடத்தினர், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் முன்பே அந்த வளாகத்தின் உள்ளே தீப்பிடித்தது எப்படி ?  ஆட்சியர் அலுவலகத்தின் வளாகம் நேற்றுமுதலே காவல்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது, 10,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் 100 நாள் போராடி ஆட்சியரைச் சந்திக்க வருவது முன்பே தெரிந்திருந்தும்  144 தடை உத்தரவைப் போட்டுவிட்டு மாவட்ட ஆட்சியர் ஓடிப்போனது ஏன்  ?    மக்களைச் சுட்டுத்தள்ள முன்பே தீர்மானித்துவிட்டு பாதுகாப்பாக அவர் பதுங்கிக்கொண்டது தெளிவாகத்தெரிகிறது. மக்களை ஆட்சியர் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை எளிமையாக கையாளாமல் தவிர்த்து எது ?

அப்படியானால் 10 ,௦௦௦  பேர் அணிதிரண்டுவந்த போராட்டத்தை ஒரு கார்பரேட் முதலாளியுடனான அரசின் உறவு தீர்மானிக்கின்றது. இறந்தவர்கள் அனைவரின் மீதும் மார்பு தவிர்த்து முகத்தில்தான் குண்டு பாய்ந்துள்ளது – ஆக, இது மக்களைப் பயன்படுத்தி கலைக்கும் காவல் துறையின் வழக்கமான இடுப்புக்கு கீழே சுடும் துப்பாக்கி சூடு இல்லை. துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரி யார் ? மக்களுக்கு ஒலிப் பெருக்கிமூலம் எச்சரிகைவிடுத்து ஏன் வெளியேற்றவில்லை. வானத்தை நோக்கி 2 -3 ரவுண்டு சுடவேண்டும், அதுவும் செய்யவில்லை. அடுத்து  லேசான  பலப்பிரயோகம் மூலம் போராட்டக்காரர்களைக் கைது செய்திருக்கவேண்டும், அதுவும் செய்யவில்லை. கடந்த 100 நாட்களிலும் சரி , இன்று காலை முதல் 5 கிலோமீட்டர் மக்கள் நடத்திய ஊர்வலத்திலும் எந்த வன்முறையும் அரங்கேறவில்லை. காவல் துறைதான் திட்டமிட்டு முழு தயாரிப்பு செய்து மக்கள் மீது வன்முறைகளை ஏவியது சம்பவத்தின் முழு தொகுப்பிலும் நிமிடத்திற்கு நிமிடம் தெளிவாக தெரிகிறது . அதற்கு ஒரே சாட்சி போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு எந்த காவல்துறை ஊழியரும் பெரிதாக  பாதிக்கப்படவில்லை. ஆக, மக்களின் பக்கம் வன்முறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

சீருடை இன்றி முஃடியில் SLR (SELF LOAD RIFLE ) துப்பாக்கி ஏந்தி காவல் துறை வாகனத்தின் மீது ASSAULT POSITION இல் 10 -15 அடி உயரத்தில் நின்று ஸ்நைப்பர் (snipper) பாணியில் மக்களைச் சுடும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. மிகப்பெரிய  ஆயுதப் போராட்டம் நடக்கும் காஷ்மீர், வடகிழக்கு தேசியஇனங்கள் மற்றும் சட்டீஸ்கர், ஜார்கண்ட்  பகுதிகளில் இராணுவத்தினர் நடந்துகொள்வதுபோல் தமிழகத்தில் ஒரு உள்நாட்டு போருக்கு இணையான படுகொலையைக் காவல்துறை இன்று நடத்தியுள்ளனர். இது சாதாரண மக்கள் மீதான வழக்கமான துப்பாக்கிசூடு இல்லை என்பதை நாம் ஆணித்தரமாக கூறலாம். இதை தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று கூட சொல்லலாம் போராட்டம் ஓய்ந்த பலமணிநீராம் கழித்து பக்கத்து கிராமத்தில் 16 வயது பெண்ணை வாயில் சுட்டுத் தள்ளியுள்ளது. இரவுவரை காவல் துறை அடக்குமுறை, வெறியாட்டம் அடங்கவில்லை. தூத்துக்குடி முழுக்க கோரத்தாண்டவம் ஆடிவருவதாக அங்கிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தங்களோடு முழக்கமிட்டு வந்தவர்கள் கண்முன்னால் குண்டுபாய்ந்து மடிவதைப் பார்த்த மக்கள் தற்காப்புகாக கல்லெறிகிறார்கள், உயிர் பிழைக்க சிதறியோடும் மக்கள் 2 கிலோமீட்டர் தூரத்தில், காவல் துறை மற்றும் ஆலை நிர்வாகத்தின் பாதுகாப்பில் இருக்கும் ஸ்டெர்லைட் குடியிருப்பைப் போராட்டக்காரர்கள் கொளுத்தினார்கள் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று. காவல்துறை வாகனங்களும் ஆட்சியர் வளாகத்திற்குள் நடந்த தீவைப்பும் ஸ்டெர்லைட் குடியிருப்பும் மக்கள் மீது பழியைப்போட்டு கம்பெனியைக் காப்பாற்றும் முயற்சியன்றி வேறில்லை. ஸ்டெர்லைட் ஆலையைத் தொழிற்சாலைப் பாதுகாப்பு படையினர் கொண்டு இனிமேல் இயக்குவதற்கான ஆலை மற்றும் அரசுநிர்வாகத்தின் திட்டமிட்ட சதித்திட்டம் என்பது பாமரனுக்கும் பார்த்த மாத்திரத்தில் புரியும்படியாகவே நகர்வுகள் அமைந்துள்ளன. மக்களின் உயிர் வாழ்வதற்கான ஜனநாயக வழிப்பட்ட போராட்டங்களை உள்நாட்டு போராக அரசு பார்க்கின்றது. அந்தளவுக்கு பாசிச அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு, மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தற்காப்புக்காக சுட்டோமென்பது கோயபல்ஸ் பாணியிலான விளக்கம் என்பதை நாம் வரலாறு முழுக்க காணமுடியும்.

தூத்துக்குடி மரணங்கள் தொடராது !

உங்கள் துப்பாக்கிகள்,

எங்கள் தோள்மாரும்!

வஜ்ரா வாகனங்கள் திசை மாறும் !

கார்பொரேட் கைக்கூலிகளே!

உங்கள் வாழ்வு விரைவில் எங்கள் வசம் ஆகும்!

அன்றைக்கு உங்கள் ஓலம் எங்கள் காதில் தேனாய்ப் பாயும்!

 

– விநாயகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW