தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்!

22 May 2018

கண்ணீர்ப் புகை வீச்சு!  துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! வஜ்ரா வண்டியுடன் ஓட்டம்!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் வன்மையான கண்டனம்!

 

தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பரப்பும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வலியுறுத்தி பலஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டம், மக்கள் போராட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடங்குளம் அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டங்கள் மையநீரோட்டத்திற்கு வந்தது போல் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உயர்நீதிமன்றம் மூட உத்திரவிட்டும் மத்திய, மாநில அரசுகளின், மாசுக்கட்டுப்பாட் வாரியத்தின் துணையுடன் லாபவெறியுடன் மீண்டும் திறக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியத்தை, சுற்றுச்சூழலை சீரழித்து வருகின்றது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில் ஆலை விரிவாக்கம் செய்யும் முயற்சி தொடங்கியதை எதிர்த்து தொடர் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மே 22 பல ஆயிரம் பேர் தூத்துக்குடி ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் அறிவிக்கப்பட்டது. காவல்துறை 144 தடையுத்தரவு பிறப்பித்ததையும் மீறி பல ஆயிரக்கணக்கில் கூடத் தொடங்கினர். கூடிய மக்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர். வஜ்ரா வாகனத்தோடு காவல்துறை புறமுதுகிட்டு ஓடுமளவிற்கு மக்கள் போராட்டம் வீரியமடைந்திருக்கிறது. தூத்துக்குடி நகரமெங்கும் ஆயிரமாயிரமாக மீனவர்கள், வியாபாரிகள், இளைஞர்கள், பெண்கள் பொதுமக்கள் திரணடு வருகின்றனர். ஆட்சியாளர் அலுவலகம் முன் திரண்டு வரும் மக்களைக் கலைக்க முடியாமல் ஓடி ஒளிந்த காவல்துறையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஊடகத்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை முதலாளிக்குத் துணை போகும் தமிழக அரசின் காவல்துறை அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும். பலியானவர்கள் குடும்பங்களுக்கு, காயம்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு போபால் விஷவாயு விபத்து தூத்துக்குடியில் நடைபெறுவதைத் தடுக்க உடனடியாக ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டும். தூத்துக்குடி மக்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுப்போம்!

 

 

RELATED POST
1 comments
  1. தமிழ்நாட்டையும் காஷ்மீரைப் போல் துப்பாக்கி சூடும் வன்முறையும் நிறைந்த மாநிலமாக்க காவல் துறைக்கு விருப்பமா? துப்பாக்கி சூடு எதையும் தடுக்காது, தூண்டவே செய்யும்.

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW