மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்

05 May 2018

மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்

மே 5, 1818 முதல் மார்ச் 14,1883 வரை

கார்ல் மார்க்ஸ்,மே 5 ஆம் 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பழமையான நகரங்களில் ஒன்றான டிரையரில் யூத குடும்பத்தில் பிறந்தார்.மார்க்ஸ் பிறந்த நான்காண்டுகளில்,இப்பகுதியை பிருஷ்யா கைப்பற்றியது.புதிய கிருத்துவ-ஜெர்மன் புனிதக் கூட்டணியானது,அனைத்து யூத இன மக்களையுன் ஞானஸ்நானம் பெறச் சொன்னது அல்லது அனைத்து அரசுப் பொறுப்புகளிருந்தும் யூதர்களை வெளியேறச் சொன்னது.வழக்கறிஞரான  மார்க்சின் தந்தை,தாம் கிருத்துவ நம்பிக்கையாளானாக மாறிவிட்டதாக அரசுக்கு மனுச் செய்தார்.

இளம் மார்க்ஸ்,போன் மற்றும் பெர்லின் பல்கலைக் கழகத்தில் சட்டம்,வரலாறு,தத்துவம் பயின்றார்.பின்னர் பெர்லின்  பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியர் பணியில் சேர விரும்பினர்.பெர்லினில் வாசித்த புருனோ பாயரின் ஆலோசனையை ஏற்று பின்னர் இம்முயற்சியை கைவிட்டார்.இக்காலகட்டதில் இளம் ஹெகலியர்கள் குழுவில் அங்கமாகிறார். ரைன்லாந்து பூர்ஷ்வா சமூக ஜனநாயகவாதி இருவர் நடத்தி வந்த Rheinische Zeitung எனும் பத்திரிக்கையில் எழுதுகிற மார்க்ஸ்,1842 ஆம் ஆண்டு அக்டோபரில் அப்பத்திரிக்கையின்  முதன்மை ஆசிரியராகிறார்.

அரசின் முதல் கட்ட தணிக்கையையும் கடந்து இப்பத்திரிக்கையில் அனல் கக்குகிற கருத்துக்களை மார்க்ஸ் எழுதிவந்தார்.மார்க்சின் சுதந்திர சிந்தனைகளை ஒரு கட்டத் தணிக்கையால் தடுக்க இயலவில்லை.பிறகு இருகட்டத்  தணிக்கை ,மூன்று கட்ட தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது.இறுதியில் 1843 ஆம் ஆண்டில் ஆட்சியாளர்களின் கடும் நிர்பந்தத்தால் பத்திரிகை மூடப்பட்டது.

இளவயது தோழியும் அன்பிற்குரிய காதலியுமான ஜென்னியை திருமணம் செய்துகொள்கிற மார்க்ஸ்,பாரிசிற்கு சென்று அர்னால்ட் ரூக்குடன் இணைந்து Deutsch-Franzoesischen Jahrbuecher பத்திரிக்கையில் எழுதத் தொடங்குகிறார்.ஹெகெல் தத்துவம் மற்றும் ஹீப்ரு கேள்வி குறித்த நீண்ட கட்டுரைகளை எழுதுகிறார்.இங்குதான் இவரை விட இரு வயது இளையவரான எங்கெல்சுடான அரசியல்,தத்துவ,தோழமை இணைப்பு ஏற்படுகிறது.ஒரே இலக்கை நோக்கிய தங்களின் ஒருமித்த சிந்தனைப் போக்குகளை கண்டுகொண்டார்கள்.தங்களது தத்துவ சிந்தனைகளை புருனோ பாயர் உள்ளிட்ட இளம் இடது ஹெகலியர்களுடனான தத்துவ முரண்பாடுகளின் வழியே வெளிப்படுத்தினார்கள்.இருவரும் இணைந்து புனிதக் குடும்பம் நூலை எழுதினார்கள்.

பாரிசில், அரசியல் பொருளாதாரத்தையும்பிரஞ்சுப் புரட்சியையும் ஆழமாக பயில்கிற மார்க்ஸ்,பிருஷ்ய அரசையும் தனது பேனா வன்மையால் தாக்கி வந்தார்.அதற்கு பரிகாரமாக அபாயகரமான புரட்சிகரவாதி என முத்திரை குத்தப்பட்டு பாரீசில் இருந்து மார்க்சை வெளியேற்றபட்ட்டார்.இளம் மார்க்ஸ்,காதல் மனைவி,கைக் குழந்தையுடன் பிரசெல்ஸ் போகிறார்கள்.

பிரசெல்ஸ்ஸில் தொழிற்சங்க இயக்க உருவாக்கத்திற்கு துணையாக இருந்த மார்க்ஸ்,தொடர்ந்து பத்திரிக்கையிலும் எழுதிவந்தார்.1846 ஆம் ஆண்டில் புரோதோனின் நூலிற்கு மறுப்பாக “தத்துவத்தின் வறுமை” நூலை பிரெஞ்சில் எழுதி வெளியிட்டார்.

1847 .காலகட்டங்களில் மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் லீக் எனும் ரகசிய தொழிலாளர் இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.சமுதாயம்,சோசலிசப் புரட்சி குறித்த கதம்பக் கருத்துக்களை கம்யூனிஸ்ட் லீகின் கொண்டிருந்தது.லண்டனின் நடைபெற்ற இந்த லீகின் இரண்டாவது காங்கிரசின் கலந்து கொள்கிற மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் லீகிற்கு வேறொரு சித்தாந்த நடைமுறை உள்ளடகத்தை வழங்குகிறார்கள். பின்னர், கம்யூனிஸ்ட் லீகிற்கான ஆவணத்தை தயாரித்து வழங்கும்படி கோரப்படுகிறார்கள்.லீகின்  வேண்டுகோளை ஏற்ற மார்க்சும் எங்கெல்சும் 1848 இல் கம்யூனிட் கட்சி அறிக்கையை எழுதி முடிக்கிறார்கள்.

ஒரு பூதம் ஐரோப்பாவை பிடித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருகிறது என்ற மரணமில்லா ஆவணம் அச்சாகிறது. உலக கண்ணோட்டம் குறித்த  புரட்சிகர நடைமுறை தத்துவத்தை கண்டடைந்தது,தலைகீழாக வழங்கப்பட்டு வருகிற உலக கண்ணோட்டத்தை நடைமுறையில் மாற்றியமைப்பதன் பொருட்டு பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கும் போராட்டத்திற்கும் அறை கூவல் விடுத்த இந்த ஆவணம் இரு இளம் மேதைகளின் “வராலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாத”தத்துவ சிந்தனையின்  சாரமாக அமைந்தது.

அறிக்கை வந்த சில நாட்களில் பிப்ரவரிப் புரட்சி வெடிக்கிறது மார்க்சின் சமூக விதி குறித்த விஞ்ஞான கண்டுபிடிப்பு, அடுத்து சில ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து எழுச்சிகளின் மூலமாக,நடைமுறை எதார்த்தமாகியது.பிரசெல்ஸ்ஸில் போராட்ட புயல் தாக்கியது.பின் அங்கிருந்தும்  மார்க்ஸ் வெளியேற்றப் பட்டார்.அவரது நண்பரான பால்கான் அழைப்பை ஏற்று பிரான்ஸ் செல்கிற மார்க்ஸ்,பின்பு மீண்டும் அங்கிருந்து ஜெர்மனி,கொலோகிற்கு செல்கிறார்.பழைய பத்திரிகையான Rheinische Zeitung மீண்டும் என்ற New Rheinische Zeitung புதிய பெயரில் தோழர்களுடன் தொடங்கிறார்கள்.மார்க்ஸ் என்கெல்சுடன்,வில்ஹில்ம் வொல்ப் மற்றும் பெர்டினன்ட் வொல்ப் போன்றோர்கள் இதில் எழுதிகிறார்கள்.பிரான்சில் அப்போது நடைபெற்றுவந்த தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஒரே சமூக ஜனநாயக பத்திரிக்கையாக  அது திகழ்ந்தது.மார்க்சும் எங்கெல்சும் இப்பத்திரிக்கையின் வழியே போராட்டத்திற்கு  அறைகூவல் விடுத்தார்கள்.பிரெஞ்சுப் புரட்சி ஆதரவு இயக்கத்தில் எங்கெல்சும் மார்க்சும் பங்கேற்றார்கள்.அதற்காக மார்க்ஸ் மீண்டும் பாரீஸ் வந்தார்.புரட்சிகர சூழல் மாறியது.தொழிலாளர்கள்  துணையின்றி குட்டி முதலாளித்துவ சக்திகள் எதிர் புரட்சிகளிடம் வீழ்ந்தார்கள்.இறுதியில் மார்க்ஸ் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.அங்கிருந்து லண்டன் செல்கிற மார்க்ஸ் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுகிறார்.பத்திரிக்கையும் 1849 ஆம் ஆண்டோடு நின்றுபோகிறது.இந்த போரட்டமிக்க காலகட்டத்தில்,உலகின் ஆகச் சிறந்த சிந்தனாவாதியின் வாழ்க்கையானது, ஓய்வு ஒழிச்சலின்றி நாடு நாடாக துரத்தப்பட்டும்,கடும்,பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டும் துன்பகரமானவையாக இருந்தது.எங்கெல்ஸ் மட்டும் இல்லையென்றால் மார்க்ஸ் இந்த துன்ப துயரத்தில்  இருந்து மீண்டு வந்து மூலதனத்தை படைத்திருக்க வாய்ப்பில்லை  என்பார் லெனின்.

1852 ஆம் ஆண்டில் பிரான்சில் நடைபெற்ற எதிர்புரட்சியின் வெற்றி குறித்த கவித்துவ படைப்பான லுயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமர் நூலை வெளியிட்டார்.1859 ஆம் ஆண்டில் உபரி மதிப்பு குறித்த முதல் முன்னோட்ட கட்டுரையான அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனம் வெளிவருகிறது.

1860 களில் சர்வதேச அளவில் எழுந்த தொழிலாளர் இயக்க எழுச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மார்க்ஸ்,முதல் தொழிலாளர் அகிலத்தை லண்டனில் 1864 ஆம் ஆண்டில் நிறுவினார்.

1870 ஆம் ஆண்டில்,மூலதனத்தின் முதல் தொகுதி வெளிவருகிறது.அதன் மீதித் தொகுதிகள் அவர் வாழும் காலத்தில் வெளிவரவில்லை.1871 ஆம் ஆண்டில் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி,பாரீஸ் கம்யூன் குறித்து பிரான்சில் உள்நாட்டு யுத்தம் நூலை எழுதினர். பாரீஸ் கம்யூன் ரத்த  வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட  பிறகு தொழிற்சங்க நடவடிக்கையில் ஏற்பட்ட விரும்பத்தகாத மாற்றங்கள்(பகுனின்) தொழிலாளர் அகிலத்தை நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியது.மூலதனம் இரண்டாம் மூன்றாம் பாகத்தை வெளியிட அயராத உழைத்த மார்க்ஸ்,ஜெர்மன் தொழிலாளர் இயக்கதிலும் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்தார். 1875 ஆம் ஆண்டில் கோதா வேலைத் திட்டத்தை எழுதி வழங்கினார்.உறக்கமற்ற எழுத்து,வாசிப்பு பணிகள் மார்க்சின் உடல் நலத்தை தாக்கியது.

1881 ஆம் ஆண்டில்  காதல் மனைவி ஜென்னியின் மரணம்,அடுத்த ஆண்டில் ஆசை மகள் லிட்டில் ஜென்னியின் மரணமும் மார்க்சை உலுக்கி விட்டது.மார்ச் 14 1883 இல் தனது நாற்காலியில் அமர்ந்தபடி மார்க்ஸ் மறைந்தார்.

குறிப்புகள்:

1. Wilhelm Liebknecht,Karl Marx: Biographical memoirs

2.Vladimir Ilyich Lenin,Karl Marx

அருண் நெடுஞ்செழியன்

# மக்கள் முன்னணி ஊடகம்

www.peoplesfront.in

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW